Tamilnadu

“உங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளைக் கொன்றுவிட்டீர்களே...” - ஜெயகோபாலுக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம்!

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர் விழுந்து இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க நிர்வாகி ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த 27ம் தேதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 12 நாட்களாக சிறையில் இருக்கும் இவர்கள் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தனது மகன் திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உங்கள் மகளை வரவேற்க இன்னோரு மகளைக் கொன்றுள்ளீர்கள் என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஏன் இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தீர்கள் என ஜெயகோபால் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஜெயகோபால் தரப்பில், விபத்து நடத்த பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு குறித்து பதில்மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை அக்டோபர் 17ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.