Tamilnadu

‘அரசியல் எதிரிகளைக் காத்த மனிதநேய பண்பாளர் தந்தை பெரியார்’- ஊடகவியலாளர் ப.திருமாவேலன் உரை

மனிதநேயம் - சுயமரியாதை குறித்த பன்னாட்டு மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது. இந்த மாநாட்டில் பெரியாரிய சிந்தனையாளரும், கலைஞர் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவுத் தலைவருமான ப.திருமாவேலன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அமெரிக்காவில் இயங்கி வரும் பெரியாரிய பன்னாட்டு அமைப்பும், அமெரிக்க மனிதநேய சங்கமும் இணைந்து நடத்திய இம்மாநாட்டில் ப.திருமாவேலன் பேசியதாவது:-

”பொதுமக்களின் சுயமரியாதைக்கும் உரிமைக்கும் விடுதலைக்கும் ஆபத்தான இயக்கம் என்று எதையாவது அவர் கருதினால் அதனை அழிக்க பின்வாங்கியது இல்லை. அதனால் எந்தப் பழி வந்தாலும் ஆபத்து வந்தாலும் அதைக் கொஞ்சமும் அலட்சியம் செய்யாமல் துணிச்சலாக நடந்து கொண்டார் பெரியார்.

ஒரு மனிதனை அவனது சுற்றுச் சார்பு தான் தீர்மானிக்கிறது என்பார்கள். ஆனால் சுற்றுச்சார்பு பெரியாரை என்றைக்கும் பாதித்தது இல்லை. சுற்றுச்சார்புக்கு விரோதமாகத்தான் அவர் நடந்து வந்துள்ளார்.

பிறப்பால் உயர்சாதி என்று சொல்லப்பட்டவர். ஆனால் பிறப்பால் கீழ்சாதி என்று அடக்கப்பட்டவர் உடனேயே இருந்தார். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் பணக்காரத் தன்மை அற்றவராக ஏழைகளுக்காக பேசுபவராக வளர்ந்தார்.

இந்திய தேசியக் காங்கிரஸின் தமிழகத் தலைவராக இருந்தார். ஆனாலும் சாதாரணத் தொண்டனைப் போல கதர் துணிகளை தோளில் சுமந்து விற்றார்.

மிகப்பெரிய ஜமீன்களும், பணக்காரர்களும் நிரம்பிய நீதிக்கட்சியின் தலைவரான பிறகும் அந்த ஜமீன்களின் தயவை நாடாமல் அவர்களை தன்னுடைய சீர்திருத்தப் பாதைக்கு திருப்பினார்.

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் அந்த ஆட்சி தன்னுடைய கொள்கையை ஏற்று செயல்படுத்தினால் அந்த ஆட்சியை தயங்காமல் ஆதரித்தார்.

இரண்டு முறை சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு வந்தது. பிரிட்டிஷ் ஆட்சி அவரிடம் கேட்டது. இரண்டு முறையும் நிராகரித்தார்.

போராட்டங்கள் நடத்திக் கொண்டார். அவர் நடத்திய போராட்டங்களைப் போல் மற்றவர்கள் காப்பி அடித்து நடத்த முடியாது. சிறைக்குச் செல்லத் தயார் நிலையில் தான் போராட்டத்துக்கு செல்வார். தன்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்காட மாட்டார். அதிகமான தண்டனைகள் கேட்பார்.சிறையில் வசதி எதிர்பார்க்க மாட்டார்.

இதை எல்லாம் சொல்வதற்குக் காரணம் சுயமரியதை - மனிதநேயம் ஆகிய கொள்கைகளுக்காக போராடிய அவர், தனது சுயமரியாதையைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் செயல்பட்டார். தான் என்ற மனிதன் எவ்வளவு அவமானப்பட்டாலும் அதைப் பற்றி கவலைப்படவில்லை.

அதனால் தான் அவர் சொன்னார், 'பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள் மான அவமானம் பற்றி கவலைப்படக் கூடாது' என்றார்.

மற்றவர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்காக தனது மான அவமானம் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டார்.

மிகக் கடுமையான கொள்கைகள், அஞ்சாத போராட்டங்கள் நடத்திய பெரியார் நடைமுறையில் யாராலும் நெருங்க முடியாத ஆளாகத் தான் இருப்பார்கள் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் பெரியார் மாபெரும் மனிதாபிமானி என்பதால் பழக இனிமையான பண்பாளராக இருந்தார்.

கடலூர் என்ற ஊரில் இரவு நேரத்தில் ஒரு கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு ரிக்‌ஷாவில் வருகிறார் பெரியார். அவர் மீது செருப்பு வீசுகிறார்கள் எதிரிகள். அந்த நேரத்தில் எந்தச் சலனமும் காட்டாத பெரியார், சிறிது தூரம் போய்விட்டு திரும்பி வந்தார். தன்மீது விழுந்த செருப்பில் இன்னொரு ஜோடி செருப்பை தேடிப் பிடித்து எடுத்துச் சென்றார்.

பெரியார் பேசிவந்த மேடைக்கு முன்னால் உட்கார்ந்து ஒருவர் கேள்வி மேல் கேள்விகளாக எழூதிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். அவை அனைத்துமே பெரியாரை கடுமையாக விமர்சிக்கும் கேள்விகள். ஒரு கட்டத்தில் அவரது பேனாவில் மை காலியாகி விட்டது. தன்னுடைய பேனாவை எடுத்துக் கொடுத்தார் பெரியார்.

பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டு அவரைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் எழுத்தாளர் ஜெயகாந்தன். தொண்டர்கள் இதனை கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களைக் கண்டித்துவிட்டு, ஜெயகாந்தனை தொடர்ந்து பேசச் சொன்னார் பெரியார்.

பெரிய சங்கராச்சாரியார் சந்திரசேகர் ஒருமுறை ஊர்வலமாக வந்தபோது, திராவிடர் கழகத் தோழர்கள் அவருக்கு எதிராக மறியல் செய்தார்கள். அந்த இடத்தில் மோதல் ஏற்படும் என்ற சூழல் வந்தது. இதனைக் கேள்விப்பட்டு அந்த இடத்துக்கு வந்த பெரியார், தனது தொண்டர்களை அமைதிப்படுத்தி சங்கராச்சாரியார் ஊர்வலம் அமைதியாகச் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தார்.

இவை எல்லாம் தன்னுடைய கொள்கை எதிரிகளிடம் காட்டிய மனிதநேயம். 'எல்லோரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள், தேதி குறிப்பேன்' என்று சொல்வார். ஆனால் அவர் தனது வாழ்நாளில் தேதி குறித்தது இல்லை.

'எல்லோரும் தீ பந்தம் ஏற்பாடு செய்யுங்கள், தேதி குறிப்பேன்' என்று சொல்வார். ஆனால் அவர் தனது வாழ்நாளில் தேதி குறித்தது இல்லை. அவரால் அவரது எதிரிகளுக்கு எந்த சட்டவிரோத துன்பமும் ஏற்பட்டது இல்லை.

கருத்துக்களால் எழுத்துக்களால் பேச்சால் பத்திரிக்கைகளால் தாக்கினாரே தவிர நேரடியாக கலவரம் செய்தவர் இல்லை. கம்பு தூக்கியவர் இல்லை. அவர் மீது எத்தனையோ வழக்குகள் உண்டு. ஆனால் கிரிமினல் வழக்கு இல்லை. அந்தளவுக்கு தனது அரசியல் எதிரிகளைக் காத்த மனிதநேய மாண்பாளர் பெரியார்.”

இவ்வாறு ப.திருமாவேலன் உரையாற்றினார்.