Tamilnadu

நூதன முறையில் ஏடிஎம்மில் கொள்ளையடித்த வட மாநிலத்தவர்கள் - சிசிடிவி கேமராவால் சிக்கியது எப்படி? 

தமிழகத்தில் வட மாநிலக் கொள்ளையர்கள் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வழிப்பறி, தங்கச் செயின் பறித்தல், ஏ.டி.எம் கொள்ளை, வங்கிக் கொள்ளை என பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை அமைந்தகரையில் ஹரியானாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஏ.டி.எம் கொள்ளையில் நூதன முறையில் ஈடுபட்டது சிசிடிவி காட்சி மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஹரியானாவைச் சேர்ந்த ஜாகிர் மற்றும் அப்ஸல் ஆகிய இருவரும் சென்னையில் அறை எடுத்து தங்கி வந்துள்ளனர். கடந்த 2ம் தேதி இவர்கள் இருவரும், அமைந்தகரையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளனர்.

அப்போது, ஏடிஎம்மில் இருந்து பணம் வராமலேயே பணம் டெபிட் ஆனதாகக் கூறி வங்கிக்கு மெயில் அனுப்பி மீண்டும் பணத்தை க்ரெடிட் செய்யும்படி செய்துள்ளனர். ஆனால் வங்கி மேலாளர் சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தபோது ஜாகிர் மற்றும் அப்சல் இருவரும் பணம் எடுக்க வந்தபோது அவர்களில் ஒருவர் ஏ.டி.எம் இயந்திரத்தின் பின்பக்கம் செல்வது தெரிய வந்தது.

இதனையடுத்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் இருவரையும் அமைந்தகரை போலிஸார் பிடித்து விசாரணை செய்ததில், பணம் எடுக்க ஏ.டி.எம்முக்கு சென்ற அவர்கள் பணம் வெளியே வரும் நொடியில் ஏ.டி.எம் மெஷினில் மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இதனால் பணம் வந்துவிடும் என்பதோடு, பணம் வெளி வந்ததற்கான தகவல் வங்கிக்குச் செல்லாது என்பதால் வங்கியில் புகாரளித்து மீண்டும் அந்தப் பணத்தை கணக்கில் வரவு வைத்துள்ளனர்.

இந்த நூதன மோசடியை இவர்கள் எங்கெல்லாம் அரங்கேற்றி உள்ளனர் என்பது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 25 ஏ.டி.எம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்ற வட மாநில கொள்ளையர்களால், தமிழகத்திலும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது லலிதா ஜூவல்லரியில் நடைபெற்ற நூதன கொள்ளை.

இந்த மாதிரியான கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்கள் எப்போதும் எப்போதும் அச்சத்துடன், பாதுகாப்பற்ற சூழலில் வாழும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.