Tamilnadu

“மோடியைக் கண்டித்து தொடர்ந்து குரல் கொடுப்போம்!” : நீதிமன்ற வளாகத்தில் சமூகப் போராளி நந்தினி ஆவேசம்!

மது ஒழிப்பை வலியுறுத்தி கடும் சவால்களை எதிர்கொண்டு வருபவர் சமூகப் போராளி நந்தினி. அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டை முற்றுகையிட முயன்று பல முறை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நந்தினி மீது கடந்தாண்டு செம்படம்பர் 9ம் தேதி விருதுநகரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக போலிஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

அந்தப் போராட்டத்தின்போது, மதுவுக்கு எதிராகவும் பிரதமர் மோடியைக் கண்டித்தும், அனுமதியின்றி கோஷம் எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது. "குடி வீட்டுக்கு கேடு, மோடி நாட்டுக்கு கேடு” மற்றும் “டாஸ்மாக்கை ஒழித்திட மோடி ஆட்சியை வீழ்த்திட போராடுவோம்" போன்ற வாசகங்களுடன் பதாகைகளை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி வழக்கறிஞர் நந்தினி அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கு விசாரணைக்காக வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் விருதுநகர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினார். அப்போது வழக்கை விசாரத்த நீதிபதி மருதுபாண்டியன் நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

நந்தினி | ஆனந்தன்

பின்னர் வெளியே வந்த வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “டாஸ்மாக்கை ஒழித்திட தொடர்ந்து போராடுவோம். இந்த வழக்குகளுக்கு பயந்து போராட்டத்தை முடித்துக்கொள்ளமாட்டோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய நந்தினி, “தமிழகத்தில் செயல்படும் அ.தி.மு.க அரசு ஒரு பொம்மை அரசு, அதனை பா.ஜ.க இயக்குகிறது. இதன் மூலம் தமிழகத்தை மறைமுகமாக பா.ஜ.க ஆட்சி செய்கிறது. மதுவுக்கு எதிராகவும் மோடியை கண்டித்தும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.” என்றார்.