Tamilnadu
“டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு பாதிப்பால் உடல்நலக்குறைவும், ஆங்காங்கே பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலியாவதும் நிகழ்கிறது. இந்நிலையில், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் பொது நல வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், சுகாதாரத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்பாததும், அரசு மெத்தனம் காட்டுவதும் தான் காரணமென சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், சுகாதாரத் துறை சார்ந்த நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டுமெனவும், டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்த உத்தரவுகள் பிறப்பித்து அவற்றைக் கண்காணிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், அதேபோல டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைக்கு அரசு செலவிட உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் என்.சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் அடியில் தேங்கியிருக்கும் நீரில் இருந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.
நடைபாதைகளை விரிவுபடுத்தியது, வாகனங்களை நிறுத்தவா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது பொதுமக்களின் சமூகக் கடமை எனவும் சுட்டிக்காட்டினர்.
இறுதியாக, டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசும், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சியும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!