Tamilnadu

“2100ம் ஆண்டுக்குள் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்” : எச்சரிக்கும் ஐ.நா - காரணம் என்ன?

காலநிலை மாற்றத்தின் காரணமாக உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதோவொரு மூலையில் 23 ஹெக்டேர் நிலம் வளத்தை இழந்தும் மரங்களை இழந்தும் பாலையாகிக் கொண்டிருக்கிறது என ஐ.நா முன்பே எச்சரித்தது.

அதுமட்டுமின்றி, பனிப்பாறைகள் உருகி உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள் நீரில் முழ்கும் என்று எச்சரித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவின் மேற்பரப்பில் பரந்துவிரிந்துகிடக்கும் பனிப்பாறைகள் நிறைந்த இமயமலையில் பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுகின்றன.

அதனால் கொல்கத்தா, சூரத், மும்பை மற்றும் சென்னை போன்ற நகரங்களில் கடல் மட்டம் உயர்ந்து நகரம் மூழ்கும் சூழல் உருவாகும் என சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் உலக நாடுகளின் காலநிலையை மாற்றி எதிரான பருவச் சூழல்களை உருவாக்குகிறது. குறிப்பாக அதன் தாக்கத்தை ஐரோப்பிய நாடுகளும், ஆசிய நாடுகளுமே சந்திக்கின்றன. இந்த நாடுகளில் அதிகரிக்கும் வெப்ப நிலையையும், மழைப்பொழிவும் பருவச்சூழல்களை மாற்றியுள்ளது.

இதில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகபட்ச வெப்ப நிலையை பிரான்ஸ் நாடு சந்தித்துள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் அச்சம் தெரிவித்துள்ளது. அதனைக் கொண்டே இந்தியாவில் ஏற்பட்டும் வெப்பநிலை உயர்வு காரணமாக இமயமலையின் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து 2100-ம் ஆண்டுக்குள் கொல்கத்தா, சூரத், மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் கடலுக்குள் மூழ்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இது குறித்து ஐக்கிய நாடு சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான குழு, ''பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் முன்பு இல்லாத அளவைவிட தற்போது உயர்ந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இமயமலை உருகி வருவதால் கடல்மட்டம் உயர்ந்து வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் நான்கு இந்திய நகரங்கள் இந்த நூற்றாண்டுக்குள் மூழ்கும் நிலை உருவாகலாம். அதனால் உலகம் முழுவதும் சுமார் 1 கோடி பேருக்கும் அதிகமானனோர் பாதிக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளது.

மேலும், இத்தகைய பாதிப்புகளை தடுக்க என்ன நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளது.