Tamilnadu

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ரகளை : தட்டிக்கேட்ட கல்லூரி முதல்வரை அறைந்த ABVP மாணவர்! (வீடியோ)

ராஜஸ்தான் மாநிலத்தில் தயானந்த் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி செயல்பட்டு வருகிறது. ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பின் தலைவராக ராம் சவுத்ரி என்பவர் இருக்கிறார்.

நேற்று முன்தினம் ராம் சவுத்ரியின் பிறந்தநாள் என்பதால் வகுப்புக்குச் செல்லாமல் அவரது நண்பர்கள் 50 பேருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது கூடியிருந்த மாணவர்கள் பெரும் கூச்சலிட்டு கத்தியுள்ளனர்.

அந்த நேரத்தில் வகுப்புகளைப் பார்வையிட்டு வந்த கல்லூரி முதல்வர் டாக்டர் லக்‌ஷ்மிகாந்த் இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து அங்கிருந்த மாணவர்களை வகுப்புக்குச் செல்லும்படி எச்சரித்துள்ளார். ஆனால் முதல்வரின் பேச்சைக் கேட்காத ராம் சவுத்ரி அவருக்கும் கேக் ஊட்டிவிட்டு அவரைத் துன்புறுத்தியுள்ளார்.

இதனால் கோபமடைந்த முதல்வர், மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இதுபோன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட அனுமதியில்லை. உங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம் சவுத்ரி கல்லூரி முதல்வர் மீது கேக்கை வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து, முதல்வரின் கன்னத்தில் ராம் சவுத்ரி அறைந்தார். இதனால் அதிர்ந்துபோன முதல்வர், அடுத்த சில வினாடிகளில் சுதாரித்துக்கொண்டு மாணவரை தாக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் முதல்வரை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

இதனையடுத்து கல்லூரி முதல்வர் மீது தாக்குதல் நடத்தியதாக ராம் சவுத்ரி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராம் சவுத்ரியும் முதல்வர் மீது புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் கல்லூரி வளாகத்திற்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.