Tamilnadu

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அபராதம்... நிஜமாகவே குடித்துவிட்டு வந்து தற்கொலைக்கு முயற்சித்த வாலிபர்! 

அரியலூர் மாவட்டம் நாயகனைப்பிரியாள் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவர் மீது டிராஃபிக் போலிஸார் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாக அபராதம் விதித்ததையடுத்து மனமுடைந்த அசோக்குமார் குடிபோதையில் நீதிமன்றம் முன்பு தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் நாயகனைப்பிரியாள் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் மீது அரியலூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கிற்காக இன்று நீதிமன்றத்திற்கு வந்து ஆஜராகிவிட்டு அசோக்குமார் ஊருக்குச் சென்றுள்ளார்.

அப்போது அரியலூர் பேருந்துநிலையம் அருகில் உள்ள அண்ணாசிலைக்கு முன்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த டிராஃபிக் போலிஸார், அசோக்குமார் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாகக் கூறி அபராதம் விதித்துள்ளனர்.

அபராதத் தொகையை கட்டிய அசோக்குமார் குடித்துவீட்டு மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். தான் வாங்கி வந்திருந்த பெட்ரோலை தன் உடல்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அசோக்குமார் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்துள்ளனர்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்த போலிஸார் அசோக்குமாரை அரியலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரனை நடத்தினர். அசோக்குமார், தான் குடிக்காமல் வந்தபோது போலிஸார் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாகக் கூறி அபராதம் விதித்ததால் மனமுடைந்து குடித்துவிட்டு நீதிமன்றம் முன்பு தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அரியலூர் போலிஸார் அசோக்குமார் மீது தற்கொலைக்கு முயற்சி என வழக்குபதிவு செய்து விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.