Tamilnadu

மீண்டும் ‘ரூட்டு தல’ மோதல் : ரயிலில் கற்களை வீசி ரகளை... 9 மாணவர்களை துரத்திப் பிடித்த போலிஸ்!

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ‘ரூட்டு தல’ பிரச்னையால் பட்டாக்கத்திகளுடன் சாலையிலேயே மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக 4 மாணவர்களை போலிஸார் கைது செய்தனர். பின்னர் மாணவர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் போலிஸார் ஈடுபட்டுவந்தனர்,

இந்நிலையில் மீண்டும் மாநில கல்லூரி மாணவர்கள் ரயிலில் ‘ரூட்டு தல’ பிரச்னையைக் கையில் எடுத்துள்ளனர். சென்னை மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் நோக்கிச் சென்றுள்ளனர்.

அப்போது அந்த ரயிலில் பயணித்த சில மாணவர்களிடையே ‘ரூட்டு தல’ பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அவர்களின் சக நண்பர்களிடம் இதுகுறித்துத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் ராயபுரம் அருகே ரயில் சென்றுகொண்டிருக்கும் போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ரயிலில் பயணம் செய்த சக மாணவர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலிஸார் விரைந்துவந்தனர். இதனைப்பார்த்த மாணவர்கள் தெறித்து ஓடியுள்ளனர். ஆனாலும் போலிஸார் மாணவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர்.

இந்த மோதலில் ஈடுபட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் 9 பேரை மடக்கிப் பிடித்தனர். பிறகு அனைவரையும் எழும்பூர் ரயில்வே போலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக எழும்பூர் ரயில்வே போலிஸார் ஐபிசி 160 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவர்களை கைது செய்தனர்.