Tamilnadu

உ.பி-யில் ஆணவப் படுகொலை : தலித் இளைஞரை உயிருடன் எரித்துக்கொன்ற கொடூரம்... அதிர்ச்சியில் தாய் மரணம்!

உத்தர பிரதேசம் மாநிலம், ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள படைச்சா கிராமத்தைச் சேர்ந்தவர் மோனு குமார். இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். அதே பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதி பெண் ஒருவரை மோனு காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மோனு குமாரின் தாயார் ராம் பேட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ராம் பேட்டிக்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டதால் லக்னோவில் உள்ள அரசு மருத்தவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து தந்தை மிதிலேஷ், மோனுவை வீட்டிற்குச் சென்று பணம் எடுத்துவரும்படி அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து மோனு வீட்டிற்குப் போய் பணம் எடுத்துக்கொண்டு தன் காதலியையும் சந்தித்துப் பேசியுள்ளார். இதனைப் பார்த்த பெண்ணின் உறவினர்கள் மோனுவின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற உறவினர்கள், மோனுவை வீட்டில் இருந்த கயிற்றுக்கட்டிலில் கட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர்.

மோனுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தோர் அங்கு சென்று பார்த்துள்ளனர். பாதி எரிந்த நிலையில் துடித்துக்கொண்டிருந்த மோனு மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் படைச்சா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் மயங்கிக் கிடந்த மோனுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே வழியிலேயே மோனு உயிரிழந்தார்.

இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மோனுவின் தாயாரும் உயிரிழந்தார். இதனையடுத்து உறவினர்கள் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலிஸார், அந்தப் பெண்ணின் உறவினர்கள் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்தக் கொலையில் தொடர்புடைய கிராமத்தைச் சேர்ந்த சத்யம் சிங் மற்றும் ஷிக்கர் சிங் இருவரும் தலைமறைவாகி உள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய 5 பேர் மீதும் கொலை வழக்கு மற்றும் பட்டியலினத்தவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆதிக்க சாதி வெறியர்களின் இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.