Tamilnadu

பேனர் சரிந்து இளம் பெண் மரணம் ; “ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்” மா.கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் வீட்டு திருமணத்திற்காக நீதிமன்ற உத்தரவை மீறி சாலையில் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தது.

அவற்றில் இருந்து பேனர் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்த போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது. அதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “எதிர்கட்சியினர், ஜனநாயக இயக்கங்கள் நடத்தும்போது, தட்டி போர்டுகள் வைப்பதற்கும், சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும் கூட காவல்துறையினர் அனுமதிப்பதில்லை.

ஆனால், ஆளுங்கட்சியினர் தங்களது கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் பிறந்த தினம், திருமண நிகழ்வுகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளின் போது ஆளுயர கட்அவுட், பேனர்கள் போன்றவைகள் சாலையை மறித்துக் கொண்டு விதிமுறைகளை மீறி வைப்பதற்கு மட்டும் அனுமதித்து வருகின்றனர். மேலும், பேனர்கள் சரிந்து கீழே விழுவதும், இதனால் உயிரிழப்பு, படுகாயம் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதும் தொடரும் வாடிக்கையாக உள்ளது.

ஏற்கனவே இது குறித்து உயர்நீதிமன்றம் விதிமுறைகளை மீறி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. ஆனால், நீதிமன்ற உத்தரவை காவல்துறையினரும், தமிழக அரசும், அதிகாரிகளும் கண்டும், காணாமலும் இருந்துள்ளதன் விளைவே மேற்கண்ட உயிரிழப்பு சம்பவம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, பொதுமக்களுக்கு இடையூறாகவும், விதிமுறைகளை மீறியும் பேனர், கட்அவுட் வைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆளும் கட்சியினரின் அராஜக, அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளால் ஏற்பட்ட இளம்பெண் சுபஸ்ரீயின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது குடும்பத்தாருக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் தலைவர்கள் பிறந்த தினம், பாராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளை பொதுவாக நடத்துவதில்லை. அதே போல திருமண நிகழ்ச்சிகளின் போதும் விதிமுறைகளை மீறி கட்அவுட், பேனர்கள் போன்றவற்றை எப்போதும் வைப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம் என அறிக்கையில் கூறியுள்ளார்.