Tamilnadu

சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நேற்று (செப்.,12) அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகனின் திருமணத்துக்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், ஷேசாயி அமர்வு தாமாக முன்வந்து விசாரணையை கையில் எடுத்தது.

அப்போது, பேனர் வழக்கு தொடர்பாக ஏராளமான உத்தரவுகள் பிறப்பித்தும் பலனில்லை, அரசின் நிர்வாகத்தை நாங்கள் ஏதும் செய்ய முடியாது. தலைமைச் செயலகத்தை உயர் நீதிமன்றத்துக்கு மட்டும்தான் நாங்கள் மாற்றவில்லை என காட்டமாக நீதிபதிகள் பேசினர்.

பின்னர், அ.தி.மு.க.வினர் வைத்த பேனர் விழுந்ததில் நிலைத்தடுமாறி இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜராகவேண்டும் என கூறி வழக்கு விசாரணையை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை இணை ஆணையர் பிராகர், பள்ளிகரணை உதவி ஆணையர் சவுரிநாதன், சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அப்போது நீதிபதிகள், பேனரில் உள்ள கலர் உங்களை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்ததா. பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது வெளிப்படையாக தெரிகிறது. தலைமைச் செயலரோ,நகராட்சி நிர்வாக செயலரோ பதில்மனுவில் கூறியது போல் செயல்படவில்லை.

அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அறிக்கை தேவை. பணியில் கவனக்குறைவு போன்றவை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கவேண்டும். இடைக்கால இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். பின்னர் அதிகாரிகளிடம் வசூலிக்கலாம். பேனர் வைத்தவர்கள் தரப்பிலும் இடைக்கால நிவாரணம் தர வேண்டும்.

உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை தலைமைச்செயலாளர் கண்காணிக்க வேண்டும். பேனர் வைக்க கூடாது என்ற கோர்ட் உத்தரவு அதிகாரிகளுக்கு தெரியும், அதன் தீவிரம் அமைச்சர்களுக்கு தெரியுமா. பேனர் வைக்கமாட்டோம் என்ற அரசியல் கட்சிகளின் அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர், பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரந்தது தொடர்பான வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்கானிக்கும் என கூறி செப்.19ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.