Tamilnadu

நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்; அதிர்ந்துபோன கோவை மாவட்டம்!

கோவை மாவட்டத்தில் உள்ள டாடாபாத் பகுதியில் மோகன் தாஸ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்று உள்ளது. வழக்கம் போல வணிக வளாகத்தை மூடிவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு ஓர் அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் எதிர் பக்கத்தில் இருந்த பேசியவர், “உங்களுடைய இடத்தில் வெடிகுண்டு உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வெடித்துவிடும்” என்றும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மோகந்தாஸ் உடனடியாக கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற போலிஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வணிக வளாகம் முழுவதும் சோதனை செய்தனர். இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் வெடிகுண்டு கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தல் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

இதனையொட்டி, வணிக வளாக உரிமையாளர் செல்போன் எண்ணிற்கு வந்த நம்பரை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது என்று கண்டறிந்து அந்த நம்பருக்குத் தொடர்ப்புக்கொண்டு போலிஸார் பேசினார்கள்.

அப்போது அந்த நம்பரில் இருந்து ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த 13வயது பள்ளி மாணவன் ஒருவர் பேசியதும், தனது சக நண்பர்களை மிரட்டல் விடுக்க நினைத்து பேசியதாகவும் ஆனால் அதில் நம்பர் தறுதாலக சென்றுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மாணவனின் பெற்றோருக்கு போலிஸார் தகவலைத் தெரிவித்தனர். பின்னர் சிறுவனை நேரில் அழைத்துவருமாறும் கூறினார்கள். பின்னர் பெற்றோருடன் வந்த சிறுவனிடம், இதுபோன்று செயல்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது என காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பினர்.