Tamilnadu

கூடுதல் ஊதியத்துக்காக விமானத்தை பழுதாக்கிய மெக்கானிக் : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 150 பயணிகள்!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று மியாமியில் இருந்து பஹாமாஸ் நகருக்குப் புறப்பட்டது. அப்போது விமானிகள் விமானத்தை ரன்வே பாதையில் இயக்கும்போது, விமானம் செல்லும் வேகம், பறக்கவேண்டிய நிமிடம் மற்றும் பிற முக்கியமான தரவுகளைத் தெரிவிக்கும் விமானத்தின் ஏர் டேட்டா பழுதாகிப் போனது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள் விமானத்தைத் தொடர்ந்து இயக்காமல் விமானத்தை திருப்பினார்கள். இதையடுத்து விமானத்தில் பயணம் செய்யவிருந்த 150 பேரும் எந்த பாதிப்பும் இன்றித் தப்பித்தனர்.

இதனையடுத்து விமான நிலையத்தில் இருந்து விரைந்து வந்த தொழில்நுட்ப ஊழியர்கள் விமானத்தில் பழுதான பகுதியில் சோதனை செய்தனர். அப்போது தகவல் தொகுக்கும் கருவியில் பசை போன்ற ஒன்று மூடிய நிலையில் இருந்துள்ளது. அதில் உள்ள குழாய் பகுதியும் பஞ்சு கொண்டு அடைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது திட்டமிட்டு அடைக்கப்படுள்ளது எனத் தெரியவந்தது.

பின்னர், விமான நிலையம் மற்றும் விமானத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது மெக்கானிக்கான அப்துல் மஜீத் மரூஃப் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் விமான கோளாறுக்கு தானே காரணம் என ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், “விமானத்துக்கோ, அதில் பயணிக்கும் பயணிகளுக்கோ பாதிப்பை ஏற்படுத்துவது எனது நோக்கம் அல்ல. விமான நிறுவன நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையேயான ஒப்பந்த விவகாரம் ஒன்றின் மூலம் எனக்கு அதிருப்தி இருந்தது.

அதுமட்டுமின்றி, கூடுதல் நேரம் பணியில் ஈடுபடுத்துகின்றனர். அதனால் ஏற்பட்ட கோபத்தாலும், கூடுதல் ஊதியத்துக்காகவும் இந்த பாதிப்பை ஏற்படுத்தினேன்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மரூஃப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.