Tamilnadu

“சங் பரிவார் கும்பலின் பேச்சைக்கேட்டு ஆளுநர் அழுத்தம் கொடுத்து மாணவரை நீக்குவதா?” வைகோ கண்டனம்!

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை மாணவர் கிருபாமோகன் ஆளுநரின் தலையீட்டால் நீக்கப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பல்கலைக் கழக இதழியல் துறையில் பயின்று, பட்டம் பெற்ற சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் கிருபாமோகன் கடந்த ஜூலை மாதம் அதே சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறை பட்ட மேற்படிப்பில் சேர்ந்து முதலாமாண்டு பயின்று வருகிறார். வகுப்புகள் தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில், திடீரென்று மாணவர் கிருபாமோகன் சேர்க்கை பல்கலைக் கழகத்திலிருந்து ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது.

கடந்த ஆகஸ்டு 21ம் தேதி மாணவர் கிருபாமோகனை அழைத்து, ஆளுநர் மாளிகையிலிருந்து உங்களை நீக்குமாறு உத்தரவு வந்துள்ளது என்று கூறி, உங்கள் சேர்க்கையை ரத்து செய்யுமாறு பல்கலைக் கழக துணைவேந்தர் வற்புறுத்துகிறார் என தத்துவவியல் துறைத் தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

எனது கல்விச் சான்றிதழ்களிலோ, கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலோ எந்தப் பிரச்னையும் இல்லாத நிலையில், என்னை எப்படி நீக்க முடியும்? என்று கேட்டதற்கு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை பயில தகுதிச் சான்று அளிக்கவில்லை என்று காரணம் கூறி உள்ளனர்.

சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே இளங்கலை பயின்ற மாணவர்கள் தகுதிச் சான்று அளிக்கவேண்டிய தேவை இல்லை. ஆனால் வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக தாம் நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் கருதுவது ஏன் என்று வெங்கடாஜலபதி அவர்களிடம் மாணவர் கிருபாமோகன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் தரப்பிலிருந்து பல்கலைக் கழகத்திற்கு தொடர்ந்து அழுத்தம் வந்து கொண்டிருப்பதால், வேறு வழியில்லை; எனவே நீக்கிவிட்டோம் என்று துறைத் தலைவர் பதில் அளித்துள்ளார்.

மேலும், நீங்கள் பெரியார், அம்பேத்கர் வாசகர் வட்டத்தில் இருப்பதால் பல்கலைக்கழக நிர்வாகம் உங்கள் மீது கோபத்தில் உள்ளதால் நீக்கிவிட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மாணவர் கிருபாமோகன், பெரியார் -அம்பேத்கர் வாசகர் வட்டம் என்னும் அமைப்பில் இணைந்து சமூகப் பிரச்னைகளுக்காக போராடி உள்ளார். எனவே இந்துத்துவ சனாதான சங் பரிவார் கும்பல் மாணவர் கிருபாமோகன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு ஆளுநர் பன்வரிலால் புரோகித்திடம் அழுத்தம் கொடுத்து, பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கி உள்ளனர்.

‘பெரியார் - அம்பேத்கர் பெயரைக் கேட்டாலே ஒவ்வாமை’ கொண்டிருக்கின்ற தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித், இந்துத்துவா சனாதான சக்திகளின் கோரிக்கையை ஏற்று, மாணவர் கிருபாமோகனை பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

தமிழக ஆளுநரின் ஏதேச்சாதிகார ஆணவப் போக்கிற்கு அடிபணிந்து, மாணவர் கிருபாமோகனை நீக்கி இருப்பதற்கு சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இதுபோன்ற மிரட்டல்கள் மூலம் தந்தை பெரியார் - அம்பேத்கர் சிந்தனைகளை மாணவர்கள் உள்ளங்களிலிருந்து துடைத்து எறிந்துவிடலாம் என்று தமிழக ஆளுநரும், துணைவேந்தரும் நினைப்பது ஒருபோதும் நிறைவேறாது.

மாணவர் கிருபாமோகன் மீதான நடவடிக்கையை சென்னைப் பல்கலைக் கழகம் உடனடியாக திரும்பப் பெற்றுக்கொண்டு, அவர் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும். இல்லையேல் மிகக் கடுமையான போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என்று எச்சரிக்கின்றேன்.” எனத் தெரிவித்துள்ளார்.