Tamilnadu

விநாயகர் சிலை ஊர்வலத்தில் தகராறு : இளைஞரை இரும்புக் கம்பியால் அடித்துக்கொன்ற முன்னாள் நண்பர்கள்!

சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி அருகே உள்ள நாழிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் திலீப் குமார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியில் விநாயகர் சிலை வைத்துள்ளனர். இந்த சிலை வைத்ததில் இருந்து அப்பகுதி இளைஞர்களுக்குள் மனக்கசப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி விநாயகர் சிலையைக் கரைப்பதற்கு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அந்த ஊர்வலத்தில் நடனமாடியபடி திருநாவுக்கரசு மற்றும் அவரது முன்னாள் நண்பர்கள் திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஆடிச் சென்றுள்ளனர். அப்போது திலீப் குமாருக்கும் மற்ற மூன்று பேருக்கும் நடனமாடும்போது மோதல் உருவாகியுள்ளது. அந்த மோதலில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த மோதலை மனதில் வைத்திருந்த திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா ஆகியோர் திலீப்பை தாக்குவதற்கு நேற்று இரவு அவர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அப்போது வீட்டருகே நின்றுகொண்டிருந்த திலீப் குமாரைத் துரத்திச் சென்று தாக்கியுள்ளார். இரும்புக்கம்பி கொண்டு திலீப் குமார் மீது தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்து மூன்று பேரும் தப்பித்து ஓடிவிட்டனர்.

தகவறிந்து வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த திலீப் குமாரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு திலீப் குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

இதனையடுத்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்களும் திலீப் குமார் குடும்பத்தினரும் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி போலிஸ் அதிகாரிகள் சமாதனம் செய்தனர். அடுத்த 2 மணிநேரத்தில் தப்பியோடிய திருநாவுக்கரசு மற்றும் சூர்யாவை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.