Tamilnadu

அரசு வேலைக்கு ஆசைப்பட்டு ரூ.41 லட்சத்தை பறிகொடுத்த இளைஞர்கள்: பாதிக்கப்பட்ட பெண் போலிஸில் புகார்!

சென்னை அகரம் லோகோ சாலையில் உள்ள ஜெயமணி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அனுபமா. இவருக்கு சமீபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மூலம் முத்துகிருஷ்ணன், அரிபாபு, குருமூர்த்தி, விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் ஐந்து பேரும் அரசு அதிகாரிகள் மற்றும் பல முக்கிய ஆட்களை தெரியும் என்றும், அவர்களின் உதவியுடன் வேலையில்லாமல் இருப்பவர்களுக்களிடம் கமிஷன் தொகையும் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கி தருவதாகவும் அவர்கள் அனுபமாவிடம் கூறியுள்ளனர். இதில் ஆட்களை சேர்த்து விடுபவர்களுக்கும் கமிஷன் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, ஜெயமணி கார்டன் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களையும் அரசு வேலை வாங்கித் தருவதாக சேர்த்துவிட்டுள்ளார்.

அப்படி, 20-க்கும் மேற்பட்டவர் இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதகாக கூறி 1 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார். அவர்களிடம் இருந்து பெற்ற தொகை 41 லட்சம் ரூபாயை அனுபமா, அந்த 5 பேரிடம் கொடுத்துள்ளார்.

பணம் கொடுத்து சில மாதங்கள் ஆன நிலையில், யாருக்கும் சொன்னபடி வேலை கிடைக்காததால் பணம் கொடுத்த இளைஞர்கள் வேலை வேண்டாம், கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என்று அனுபமாவிடம் கேட்டு வற்புறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அனுபமா பணத்தை பெற்ற ஐந்து பேரிடம் பணத்தை ஒப்படைக்கும் படி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை திரும்பி தராமல் இழுத்தடித்தும், மிரட்டியும் வந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அனுபமா பின்பு சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பணம் பெற்ற ராஜேந்திரன், முத்துகிருஷ்ணன், அரிபாபு, குருமூர்த்தி, விஜயபாஸ்கர் மற்றும் நிர்மலா ஆகியோர் மீது புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலிஸார் அனுபமா உட்பட ஐந்து பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என பல விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்படும் போதும், இது போல இளைஞர்கள் ஏமாறுவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.