Tamilnadu

“கத்தி பட்டால் தாங்கமாட்டாள்; என் மனைவி உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டாம்!”: கொலைசெய்து நாடகமாடிய கணவன்! 

உளுந்தூர்பேட்டையை அடுத்த குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த தவமணி என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் எட்டு மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் மணிகண்டனின் மனைவி தவமணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் முன் தன் மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பது போல காட்டிக்கொண்டார் மணிகண்டன். எக்காரணத்தைக் கொண்டும் தனது மனைவி மீது கத்தி படக்கூடாது எனவே அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளார்.

இருப்பினும் அவரை சமாதானப்படுத்திய காவல்துறையினர் தவமணியின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஊர் பிரமுகர்களும் மணிகண்டனுக்கு ஆதரவாக தவமணியின் உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டாம் என காவல்துறையிடம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மணிகண்டன்

இதனால், காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து தவமணியின் உடலை உடற்கூராய்வு செய்தபோது, தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சடலத்தை கணவனிடம் தான் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி மணிகண்டனை அழைத்து வரச் சொல்லியிருக்கிறார்கள்.

தனது மனைவியின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் தருவார்கள் என நினைத்து மருத்துவமனைக்கு வந்துள்ளார் மணிகண்டன். அவரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மணிகண்டன் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணுடன் சேர்ந்து சுற்றுவதற்காக கடன் வாங்கி இருசக்கர வாகனம் ஒன்றையும் வாங்கியுள்ளார். வேறொரு பெண்ணுடன் கணவன் சுற்றுவதை அறிந்த தவமணி இதுகுறித்து மணிகண்டனிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இதனால் அவர்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இருசக்கரவாகனம் வாங்கிய கடனுக்கு தவணைத் தொகை செலுத்த பணம் இல்லாததால் வரதட்சணையாக 20 ஆயிரம் ரூபாய் வாங்கிவரச் சொல்லி மனைவியை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் தவமணியை சுவற்றில் அடித்து கொலை செய்துள்ளார் மணிகண்டன்.

பின்னர், கொலையை மறைப்பதற்காக தவமணியின் சடலத்தை சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைப் போல தொங்கவிட்டுள்ளார். தூங்கிக்கொண்டிருந்த அவர்களது மகன் திடீரென கத்தியதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டுள்ளனர். இதையடுத்து, தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கதறி அழுது அனைவரையும் நம்பவைத்துள்ளார்.

மணிகண்டன் அழுததைப் பார்த்தே ஊர்மக்களும் தவமணியின் உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டாம் எனக் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மணிகண்டனை கைது செய்த காவல்துறையினர் குற்றவியல் நீதிபதி முன் ஆஜர் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மணிகண்டனின் தவறால் இரு குழந்தைகளும் தாய் தந்தையரை இழந்து ஆதரவில்லாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.