Tamilnadu
“அம்பேத்கர் சிலையை உடைத்த வன்முறைக் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்” : வைகோ வலியுறுத்தல்!
வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. இதுதொடர்பாக, வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நாகை மாவட்டம், வேதாரண்யம் காவல் நிலையம் எதிரிலேயே அரசியல் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் சிலையின் தலைப் பகுதி உடைத்து நொறுக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. இச்செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.
கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு இரு சமூகங்களிடையே மோதல் ஏற்பட்டு, வன்முறைத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. காவல்துறையின் அலட்சியத்தின் காரணமாக, நேற்று ஒரு கும்பல் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வேதாரண்யம் கடை வீதியில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி உள்ளது. மேலும் பட்டியலின மக்களின் கடைகளையும் அடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கி உள்ளது.
காவல்துறை அமைதியாக வேடிக்கை பார்த்ததால், அந்த வன்முறைக் கும்பல் ஆத்திரம் தலைக்கு ஏறி, அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்து நொறுக்கி இருக்கிறது.
சமூக நல்லிணக்கமும், ஒற்றுமையும் இருந்தால்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழும் என்பதை இதில் தொடர்புடையவர்கள் நன்கு உணர வேண்டும்.
அம்பேத்கர் சிலையை உடைத்த வன்முறைக் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அரசுத் தரப்பில் மாற்று ஏற்பாடு செய்து, உடனடியாக மற்றொரு அம்பேத்கர் சிலை அங்கே நிறுவப்பட்டு இருப்பது ஆறுதல் தருகிறது.
ஆனால், இதுபோன்ற வன்முறைகள், சிலை உடைப்புகள் தொடராமல் இருக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!