File image
Tamilnadu

“சமத்துவம் மற்றும் சமூக நீதியின் உறுதிமிக்க குரலை ஒலிக்கும் திருமாவளவன்...” : மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று (ஆகஸ்ட் 17) தனது 57வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தொல். திருமாவளவன் எம்.பி., அவர்களுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, “சமத்துவம் மற்றும் சமூக நீதியின் உறுதிமிக்க குரலாக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் பாசத்திற்குரிய சகோதரர் - சிறந்த பண்பாளர் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. அவர்களுக்கு 57வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மனமகிழ்ச்சி கொள்கிறேன்.

சமுதாயத்தில் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், அவர்தம் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும், அப்பழுக்கற்ற மதச்சார்பின்மைக்காகவும், ஆரோக்கியமான ஜனநாயகம் தொடர்ந்து செழுமை அடைய வேண்டுமென்பதற்காகவும், இளம் வயதிலிருந்தே இடது சாரிச் சிந்தனையுடன் குரல் கொடுத்து வரும் திருமாவளவன், தலைவர் கலைஞர் அவர்கள் மீதும், என் மீதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், இலட்சியங்களின் அடிப்படையிலும் தனிப்பட்ட முறையிலும்,அளப்பரிய பற்றும் பாசமும் வைத்திருப்பவர்.

சோதனைகளைச் சாதனைகளாக்கும் தனித்திறன் படைத்த அவர், பொதுவாழ்வில் மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திடவும், தொடர்ந்து மேலும் பல உயரங்களை அடைந்திடவும், அவர் பல்லாண்டு காலம், உடல் நலத்துடனும் மன வளத்துடனும் நிறைவுடனும், வாழவேண்டும் என்று எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.