Tamilnadu

ஒரே இரவில் 150 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய காவேரி டிவி நிர்வாகம்- சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காவிரி செய்திகள் தொலைகாட்சியை மூட நினைக்கும் நிர்வாகத்தை கண்டித்தும் சட்டவிரோதமாக நிறுவனத்தை மூட நினைக்கும் நிர்வாகத்தை, சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வரும் காவிரி தொலைகாட்சி, கடந்த சில மாதங்களாக அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்துவந்தது. நிதி நிலை சிக்கலே இதற்கு காரணம் என்று கூறிய நிர்வாகம், மறுபுறம் புதிய நபர்களை பணிக்கு சேர்ப்பதை நிறுத்தவில்லை.

நிதி நெருக்கடி காரணமாக காவிரி தொலைகாட்சியை நிர்வாகம் மூடப்போவதாக அவ்வப்போது தகவல்கள் பரவியபோது, அப்படி ஒரு எண்ணம் இல்லை என்றும், எப்போதும் அதுபோன்று நடக்காது என்றும் நிர்வாகம், தொடர்ந்து நம்பிக்கை அளித்து வந்துள்ளது. இதனால், மாதக்கணக்கில் சம்பள பாக்கி இருந்தாலும், நிர்வாகம் தங்களை கைவிடாது என்ற நம்பிக்கையில்,காவிரி தொலைகாட்சி ஊழியர்கள் தங்கள் பணியில் எந்த குறையும் வைக்காமல் தொடர்ந்து வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 09.08.2019 அன்று, காவிரி தொலைகாட்சியின் மேலாண் இயக்குனர் திரு.இளங்கோவன், திடீரென்று ஊழியர்கள் மத்தியில் பேசியுள்ளார். அப்போது, இனியும் தொலைக்காட்சியை நடத்த முடியாது என்றும், ஆகவே, அனைவரும் வேறு இடங்களில் வேலை தேடிக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், 09.09.2019 வரை மட்டுமே சம்பளம் தரப்படும் என்றும், நாளை முதல் யாரும் வேலைக்கு வர வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அனைவரும், இப்படி திடீரென்று வேலையை விட்டு போகச் சொன்னால் உடனடியாக வேலை கிடைக்காது என்று இளங்கோவனிடம் கூறியுள்ளனர்.

ஊழியர்களின் அந்த நியாயமான கேள்விக்கு உரிய பதிலை அளிக்காத இளங்கோவன், நிர்வாகத்தின் முடிவு இறுதியானது என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இதன் பிறகு, அடுத்த மூன்று நாட்கள் மட்டுமே, ஊழியர்கள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஊழியர்கள், அலுவலகத்திற்குள் நுழைய நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஒரு நிறுவனத்தை மூடக் கூடிய சூழல் ஏற்பட்டால், அதன் நிர்வாகம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் “தொழில் தகராறு சட்டம் 1947”-ல் மிக தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் “பிரிவு 25 O”-ல், ஐம்பதுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனத்தை, அந்த நிறுவனம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மூட முடியாது என்பது தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தை மூட வேண்டும் என்றால், குறைந்தது 3 மாதங்களுக்கு முன்னர் அதுகுறித்து அரசுக்கும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று “பிரிவு 25 O”-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தை மூட வேண்டும் என்று அரசிடம் நிர்வாகம் கேட்டுக்கொண்ட பிறகு, தொழிலாளர்களிடம் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும், நிறுவனத்தை மூடுவதற்காக நிர்வாகத்தின் தரப்பில் கூறப்படும் காரணத்தை ஆராய்ந்த பிறகுமே, அந்த நிறுவனத்தை மூடலாமா, வேண்டாமா என்பது குறித்து அரசு இறுதி முடிவெடுக்கும் என்று “பிரிவு 25 O” தெளிவாக கூறுகிறது. ஒருவேளை நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, நிறுவனத்தை மூடுவதற்கு அரசு ஒப்புதல் அளித்தாலும் கூட, தொழில் தகராறு சட்டத்தின் “பிரிவு 25 O (5)”-ன் படி, அந்த ஒப்புதலை எதிர்த்து தொழிலாளர் தரப்பில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் நிறுவனத்தை மூடுவதற்கு ஒப்புதல் மறுக்கப்பட்டால், அதுவரை, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் உட்பட அனைத்து பலன்களையும் அந்த நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் “பிரிவு 25 O (6)” கூறுகிறது. இந்த விதிகளை பின்பற்றாமல், அரசுக்கு தெரிவிக்காமல் ஒரு நிறுவனத்தை மூடினால், அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று “பிரிவு 25R” தெரிவிக்கிறது. அத்துடன், சட்டத்துக்கு புறம்பாக மூடப்பட்ட ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று “பிரிவு 25R (2)” தெரிவிக்கிறது.

தொழில் தகராறு சட்டம் 1947, பிரிவு 25FFF மற்றும் பிரிவு 25F, ஒரு நிறுவனத்தை தவிர்க்க முடியாது காரணத்தால் மூட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 3 மாத சம்பளத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என தெரிவிக்கின்றன. அதிலும், பொருளாதார நெருக்கடி, தொடர் நஷ்டம் ஆகியவற்றை “தவிர்க்க முடியாத காரணமாக” கருத முடியாது என்றும் “பிரிவு 25FFF” கூறுகிறது.

தொழில் தகராறு சட்டம் 1947-ல் அடங்கியுள்ள இந்த பிரிவுகளை வைத்து பார்க்கும்போது, தற்போது காவேரி நியூஸ் தொலைகாட்சி நிர்வாகம் சட்டத்திற்குப் புறம்பாகவே நிறுவனத்தை மூடியுள்ளது தெளிவாகிறது. ஆகவே, இந்த சட்டத்தின் படி, ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதும் தெளிவாகிறது.

ஆகவே, 150 ஊழியர்களின் எதிர்காலத்தையும், அவர்களை நம்பியுள்ள குடும்பத்தையும் சிறிதும் கருத்தில்கொள்ளாமல், சட்டத்தையும் மதிக்காமல், நிறுவனத்தை மூட நினைக்கும் காவேரி நியூஸ் தொலைகாட்சி நிர்வாகத்தை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

இதுநாள் வரை, தாமதமாக சம்பளம் வந்தாலும், நிர்வாகம் கைவிடாது என்ற நம்பிக்கையில் பணியாற்றிய ஊழியர்களை, அப்பட்டமாக ஏமாற்றியுள்ள காவேரி நிர்வாகத்தை, சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

இந்த விவகாரத்தில், தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை உடனடியாக தலையிட்டு, காவேரி தொலைகாட்சி ஊழியர்களுக்கு நியாயம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

காவேரி தொலைகாட்சியின் இந்த மனசாட்சியற்ற, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையை, அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது” என அறிக்கை வெளியிட்டுள்ளது.