Tamilnadu
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது : வழக்கை முடித்துவைத்த உயர்நீதிமன்றம்!
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், இரு மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டு அதை தமிழக அரசு பெற்றுக்கொண்டு விட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டு 19 மாதங்களான போதும் அதுபற்றி வாய் திறக்காமல், நீட் விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றி வந்த தமிழக அரசு பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. நீட் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், நீட் மசோதாக்கள் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எந்த காரணங்களும் தெரிவிக்காமல் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், நடைமுறை நிறைவடையவில்லை என கருத வேண்டியுள்ளதாகவும், அதனால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் நீண்ட விவாதமும் நடத்தப்பட்டதாகவும், மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு 2017 அக்டோபர் 25ம் தேதி முதல் 2018 மே 5ம் தேதி வரை 11 கடிதங்களை தமிழக அரசு அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, மத்திய அரசு ஒரு உத்தரவு பிறப்பித்திருப்பதால், நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் நடைமுறை பின்பற்றவில்லை என்றால், தனி வழக்காக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.
Also Read
-
“கோவிட் காலத்தில் கைதட்ட சொன்ன மோடி.. இப்போதும் மோடி அரசு திருந்தியபாடில்லை..” - திமுக இளைஞரணி விமர்சனம்!
-
RCB அணியை வாங்கியது இவர்களா? மிகப்பெரிய தொகைக்கு கைமாற்றம்.. அணியில் மாற்றம் நிகழுமா! - முழு விவரம்!
-
“175 இடங்களில் உதயசூரியன்; 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
“சிலிண்டர் வழங்குவது மாநில அரசின் கையிலா இருக்கிறது?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!