Tamilnadu

ஆளும் கட்சி என்றால் சட்டவிரோதமாக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா ? : பேனர் விவகாரத்தில் நீதிபதிகள் கோபம்

சட்டவிரோத பேனர் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைச் செயல்படுத்தத் தவறியதாக தமிழக தலைமை செயலாளர் மீது டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அ.தி.மு.க பிரமுகர் இல்ல திருமண விழாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதல்வருக்கு பேனர் வைத்த விவகாரம் குறித்து தலைமை செயலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் புகழேந்தி காணொளி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது, தலைமை செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருமண விழாவிற்கு 100 பேனர்கள் வைக்க அ.தி.மு.க நிர்வாகி ராஜா என்பவர் விண்ணப்பித்ததாகவும், அதை மாவட்ட நிர்வாகம் நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல அரசு தரப்பில், கோயம்பேடு முதல் வானகரம் வரை வைக்கப்பட்டிருந்த 70 பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சட்டத்திற்கு உட்பட்ட விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பொது மக்கள் பிறந்தநாள் விழா, காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைப்பதாகவும், அரசியல் கட்சிகள் பேனர் வைப்பதைத் தவிர்க்க அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு பிரிண்டிங் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும், பேனர் வைக்கப்படுவதைத் தடுக்க வேண்டியது மாநகராட்சி ஊழியர்களின் கடமை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுக்க அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை என்றும் இந்த பேனர்கள் வைக்கும்போது அதிகாரிகள் எங்கே சென்றனர் எனவும் கேள்வி எழுப்பினர். சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்டம் ஒழுங்கு மீதும் நீதி பரிபாலன முறை மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.

சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுப்பதாக தலைமைச் செயலாளர் கூறும் நிலையில், ஆளுங்கட்சியினரே அதிக பேனர்கள் வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத பேனர்கள் வைக்கக்கூடாது என தங்களது கட்சி நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கும்படி அரசியல் கட்சி தலைவர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அதிகாரிகளிடம் முறையாகத் தகவல் பெற்று மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். மேலும், நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதைத் தலைமை செயலாளர் உறுதி செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.