Tamilnadu

20 ஆண்டுகளுக்கு முன்பு தவறுதலாக எச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு!

மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த குழந்தைக்கு, எச்.ஐ.வி., தொற்று பாதித்த ரத்தத்தை ஏற்றிய விவகாரத்தில், 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 1999ம் ஆண்டு தன் குழந்தையை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தார். சிகிச்சையின்போது, அந்தக் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

இதனால், குழந்தைக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்புக்கும், மன உளைச்சலுக்கும், மருத்துவச் செலவுகளுக்கும் பொறுப்பேற்று 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மருத்துவமனைக்கு உத்தரவிடக்கோரி, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் குழந்தையின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, சென்னை 17வது கூடுதல் அமர்வு நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, “ரத்த வங்கி தொடர்பாக, உச்சநீதிமன்றம் பல அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. நோயாளிக்கு ரத்தம் செலுத்தப்படும் முன்பு அதில், எய்ட்ஸ், மஞ்சள்காமாலை போன்றவற்றிற்கான நோய்க் கிருமிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்பது அவற்றில் அடிப்படை.

ஆய்வு செய்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், அதற்கான ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆவணங்களை அழித்தது தொடர்பான விவரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கில், மருத்துவர்களின் கவனக் குறைவால், குழந்தையின் உடலில் எச்.ஐ.வி., கிருமி பரவியுள்ளது.

எனவே, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். மேலும், வழக்கு தொடரப்பட்ட நாளிலிருந்து, 6 சதவீத வட்டியுடன் சேர்த்து இந்தத் தொகையை வழங்கவேண்டும். மேலும், இத்தனை ஆண்டுகளாக வழக்கு நடத்தப்பட்டதற்கான செலவாக குழந்தையின் பெற்றோருக்கு, ஒன்றரை லட்சம் ரூபாயையும், மருத்துவமனை அளிக்கவேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவருக்கு தற்போது 21 வயதாகிறது. எஞ்சிய காலத்தை பொருளாதாரச் சிக்கல் இல்லாமல் கழிக்க அவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.