Tamilnadu

மூடிய அறைக்குள் ரகசியமாக நடந்த புதிய கல்வி கொள்கை கருத்து கேட்பு கூட்டம் : போராட்டத்தால் முறியடிப்பு!

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தினுள் இருக்கும் கேந்திரிய வித்தியாலயா பள்ளியின் ஒரு அறைக்குள், எந்த முறையான அறிவிப்பும் இன்றி, இன்று (22. 7.2019) காலை புதிய கல்விக்கொள்கை வரைவு பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் ரகசியமாக நடைபெறுகிறது என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிந்து, அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்த புதிய தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கையை மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கை இந்தியை திணிக்கும் நோக்கில் அமைந்துள்ளதாகவும், ஏழை மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாக உள்ளது எனவும் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த வரைவு அறிக்கை தொடர்பாக ஜூலை 31ம் தேதி வரை கருத்துகளை தெரிவிக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அவகாசம் அளித்துள்ளது. இந்த வரைவு அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் துணை ஆணையர் சி. மணி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐ.ஐ.டி பேராசிரியர்கள், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள், பள்ளி மேலாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பெற்றோர்களும் கலந்துகொள்ளவில்லை. மாணவர்களும் பங்கேற்கவில்லை. பொதுமக்களாவது பங்கேற்றார்களா என்றால் அதுவும் இல்லை. இதனால், இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை மாணவர்களின் பெற்றோர்களை அழைக்காமல் ரகசியமாக நடத்துவதாகக் கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கூட்டத்தை நிறுத்தக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இப்படியான கூட்டத்தை பொது இடத்தில் - மக்களிடத்தில் - மாணவர்களிடத்தில் நடத்த வேண்டுமே ஒழிய, உங்களுக்குள்ளாக ரகசியமாக நடத்திக்கொள்ளக்கூடாது என வாதிட்டவர்கள், கூட்டத்தை ரத்து செய்யும்வரை இங்கிருந்து வெளியேற மாட்டோம் என அங்கேயே அமர்ந்துகொண்டார்கள். வேறுவழியில்லாத நிலையில் அதிகாரிகள் ‘கருத்துக் கேட்பு’ கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.