Tamilnadu
“ 19000 அரசு மாணவர்கள்ல ரெண்டு பேரு நீட் பாஸ் ஆகி இருக்காங்களே..”: அமைச்சர் கல்வி செங்கோட்டையன் பெருமிதம்
அரசு நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இருவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பெருமையாகத் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்ததால், கிராமப்புற மாணவர்களின் நீட் கனவு தகர்ந்துபோனது. தமிழக அரசின் பாடத்திட்டத்திற்கு தொடர்பில்லாத வகையில் நடத்தப்படும் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற இயலாமல் தவிக்கின்றனர்.
நீட் விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு 2017ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அதனை மறைத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கு தனது விசுவாத்தைக் காட்டி தமிழக மாணவர்களை வஞ்சித்தது தமிழக அரசு.
2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கிவைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஒவ்வொரு ஆண்டும் 500 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் எனக் கூறினார். ஆனால், தற்போதைய நிலை மிகுந்த கவலைக்கிடமாக உள்ளது.
மாநிலம் முழுவதும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்ள பயிற்சியளிப்பதாக அ.தி.மு.க அரசு தம்பட்டம் அடித்தது. ஆனால் அ.தி.மு.க அரசு சார்பில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் ஒருவருக்கு கூட மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என தகவல் வெளியானது.
இந்நிலையில், “அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் கூட தேர்வாகவில்லை என்ற செய்தி தவறானது. அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 2 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர்.” எனப் பெருமை பொங்கத் தெரிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.
ஆனால், அரசு ஒதுக்கீட்டில் ஒரே ஒரு மாணவிக்கு மட்டுமே சீட் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் சொல்வதுபடி பார்த்தாலும் ஒரு ஆண்டில் அரசால் இரண்டு பேரை மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கச் செய்யமுடியும் என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயமே.
இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளையும், ஆண்டுதோறும் அதிகமான மாணவர்களை மருத்துவராக்கியும் வந்த தமிழகம் அந்தப் பெருமைகளை இழப்பதற்கு வழிகோலுகின்றன மத்திய - மாநில அரசுகள். அதற்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் ஒப்புதலும் சாட்சி.
Also Read
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !