Tamilnadu

எங்கும் ஊழல்.. எதிலும் ஊழல் : தி.மு.க கொண்டுவந்த ஆம்புலன்ஸ் திட்டத்தில் முறைகேடு செய்யும் அ.தி.மு.க

உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிருக்குப் போராடி வருபவர்களை சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிர்பிழைக்கச் செய்வதில் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பங்கு முக்கியமானது. அதிலும் குறிப்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்.

தமிழகத்தில் குடும்பநலம் மற்றும் பொதுசுகாதாரத்துறை சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது இத்திட்டத்தின் கீழ் சுமார் 300 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 108 அவசரக் கால சேவையை GVK EMRI நிறுவனம், தமிழ்நாடு அரசோடு செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் 3 லட்சம் கிலோ மீட்டர் பயணித்த அல்லது 6 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்பட்டு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களில் முழுபராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பராமரிப்பு பணிக்கான நிதியை ஆம்புலன்ஸ் நிறுவனங்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.

ஆனால், இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களை கம்பெனி சர்வீஸ் நிலையங்களில் ரிப்பேர் செய்யாமல், தனியார் மெக்கானிக்குகளிடம் குறைந்த விலையில் ரிப்பேர் செய்யப்படுகிறது.

தனியார் மெக்கானிக்குகளிடம் ரிப்பேர் செய்யப்படுவதால் தரமற்ற உதிரி பாகங்கள் பொருத்தப்படுகிறது. இது அடிக்கடி பழுதாகிறது என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 70க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் முறையான பராமரிப்பு செய்யப்படவில்லை என்றும், அடிக்கடி ரிப்பேர் ஆவதால் நோயாளிகளுக்கான சேவை அளிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

எனவே 108 ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சுகாதாரத்துறை அறிவித்தபடி 108 ஆம்புலன்ஸ் சேவையை விரிவுப்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ஆம்புன்ஸ்களை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.