Tamilnadu
மாமுல் தரலைன்னா வெட்டுவோம்: பெட்ரோல் பங்க்கில் புகுந்து ரவுடிகள் கும்பல் வெறியாட்டம்- அதிர்ச்சி தகவல்கள்
சென்னை தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் பத்து பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர குடிபோதயில் அவர்களது வாகனத்துக்கு பெட்ரோல் போட வந்துள்ளது. கத்தி, அரிவாள் உள்ளிட்ட கொடூரமான ஆயுதங்களை அவர்கள் மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. அவர்களது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பின் அங்குள்ள வாடிக்கையாளர்களையும் பெட்ரோல் பங்க் ஊழியர்களையும் தாக்கத் தொடங்கினர்.
அங்கிருந்து போக மறுத்த வாடிக்கையாளர்களை சரமாரியாக கடுமையாக தாக்கினர். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. அது கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ காட்சியில் கேங் லீடர் போல் காட்சி அளிக்கும் ஒருவர், இரண்டு கைகளிலும் ஆயுதங்களை வைத்துக்கொண்டு அங்கிருந்த இளைஞர் ஒருவரை சரமாரியாக தாக்குகிறார். மர்ம நபர்களில் ஒருவரே அவரை தடுத்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் அந்த இளைஞரைத் தாக்கும் காட்சி பதைபதைக்கச் செய்கிறது.
மேலும் பெட்ரோல் பங்க் உரிமையாளரின் தந்தையையும் அந்த மர்ம கும்பல் விட்டுவைக்கவில்லை. அவரை வெட்ட முயன்றபோது பெட்ரோல் பங்க்கின் உரிமையாளர் வந்து தடுத்ததால் அவர் உயிர்தப்பியுள்ளதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவர் மயங்கிய நிலையில் இருந்த போதும் அவரை காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பீர்க்கங்கரணை போலீசார் பொதுமக்கள் மீது இந்த கொலைவெறி தாக்குதல் அரங்கேறியது ஏன் என்று விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சென்னை தாம்பரத்தில் சூர்யா மற்றும் உதயா என்று இரண்டு ரவுடி கும்பல் உள்ளது. இதில் உதயா கடந்த 8 மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். ஆனாலும் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் சூர்யா தலைமையில் இரண்டு குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த ரவுடி கும்பல் கடந்த பல ஆண்டுகளாக தனியார் வணிக வளாகங்களில் மாமூல் வாங்குவதையே தொழிலாக செய்து வந்துள்ளது. இதுதான் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு காரணமாக இருந்துள்ளது.
சம்பவம் நடந்த பெட்ரோல் பங்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமூல் கேட்டு வந்துள்ளனர். பின்னர் மீண்டும் மாமூல் கேட்டு வந்ததால் பெட்ரோல் பங்க் உரிமையாளர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கும்பல் பெட்ரோல் பங்க்கை சூறையாடி அங்கிருந்த வாகனம் மற்றும் கண்ணாடி பொருட்களை அடித்து நொறுக்கினர். இந்தத் தாக்குதலில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சூர்யா மீது 8 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை நிகழ்த்திய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை தாக்குதல் நடத்திய 8 பேரும் சரணைடைந்தனர்.
இரவு நேரங்களில் போலீசார் சரியாக ரோந்து பணியில் ஈடுபடாததே இதுபோன்று ரவுடி கும்பல்கள் பொதுமக்களை தாக்க காரணம் என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!