Tamilnadu

‘சரவணபவன்’ ராஜகோபால் : அண்ணாச்சி எப்படி கொலைக் குற்றவாளி ஆனார்? சாம்ராஜ்யம் சரிந்தது எப்படி?

உலகம் முழுவதும் கிளை பரப்பி தனி சாம்ராஜ்யம் நடத்திய சரவண பவன் உணவகத்தின் நிறுவனரும், உரிமையாளருமான ராஜகோபால், கொலை வழக்கு ஒன்றில் சிக்கி இன்று இத்தனை ஆண்டு கால தூக்கத்தை தொலைத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு, இன்று மரணமடைந்து இருக்கிறார். அவரது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

சரவண பவன் ராஜகோபால், கொலை குற்றவாளியாக மாறியது எப்படி என்பதை பார்ப்போம். தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜகோபால் 1980களில் சென்னை கே.கே.நகரில் மளிகைக் கடையைத் திறந்து மக்களின் அபிமானத்தைப் பெற்றார். நல்ல லாபம் கிடைத்ததைத் தொடர்ந்து கே.கே.நகரிலேயே சிறிய அளவில் உணவகம் ஒன்றையும் துவக்கினார். ‘சரவண பவன்’ எனப் பெயர் வைக்கப்பட்ட அவரது உணவகத்தின் பெயர், உணவின் சுவையாலும், தரத்தாலும் சென்னை முழுக்கப் பரவியது.

இன்று சரவண பவனுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கிட்டத்தட்ட 50 உணவகங்கள் இருக்கின்றன. தென்னிந்தியாவின் மிகப்பெரிய சைவ உணவக பிராண்டாக வளர்ந்து நிற்கிறது சரவண பவன். இத்தனை பிரமாண்டமான சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பிய ராஜகோபால், எதையும் அனுபவிக்க முடியாமல் வழக்கில் சிக்கி, தண்டனை அனுபவிக்கும் நிலையிலேயே தற்போது காலமாகியுள்ளார்.

1994ம் ஆண்டு சரவண பவன் நிகழ்ச்சி ஒன்றில், ஊழியர் ஒருவரின் மகளான ஜீவஜோதியும் கலந்துகொண்டார். அப்போது +2 படித்துக் கொண்டிருந்த ஜீவஜோதியை முதன்முதலாகப் பார்த்தபோதே ராஜகோபாலுக்கு விருப்பம் ஏற்பட்டுவிட்டது. ஜோதிடத்தின் மீதிருந்த மிகையான நம்பிக்கையால், அவர் மூன்றாவது திருமணம் செய்துகொண்டால் தான் தொழிலில் நிலைக்க முடியும் என ஒரு ஜோதிடர் சொன்னதைக் கேட்டு, ஜீவஜோதியை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொள்ள முயற்சித்தார்.

இதையறிந்த ஜீவஜோதியின் தந்தை ராமசாமி தனது வேலையை விட்டுவிட்டு வேறு பகுதிக்குக் குடிபெயர்ந்தார். ஆனாலும், ராஜகோபால் சொத்துகளைத் தருவதாக ஆசைகாட்ட, அவரும் ஜீவஜோதியிடம் பேசிப் பார்த்திருக்கிறார். ஜீவஜோதியோ, தனது சகோதரனுக்கு டியூஷன் எடுக்க வந்த பிரின்ஸ் சாந்தகுமாரை காதலிக்கத் தொடங்கினார். நெருக்கடி அதிகரிக்கவே 1999-ம் ஆண்டில் வீட்டை விட்டு வெளியேறி பிரின்ஸ் சாந்தகுமாரை மணந்துகொண்டார்.

வேளச்சேரியில் தங்கியிருந்த ஜீவஜோதி - சாந்தகுமார் தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்தார் ராஜகோபால். முதலில் டேனியல் என்பவரை வைத்து சாந்தகுமாரை கொலை செய்ய ஏவினார் ராஜகோபால். அதற்காக 5 லட்சம் ரூபாய் பணமும் அளி்த்தார். சாந்தகுமாரை கொலை செய்துவிட்டு ஜீவஜோதியை அபகரிப்பதுதான் ராஜகோபாலின் திட்டம். ஆனால் சாந்தகுமாரை பார்த்து மனம் இறங்கிய டேனியல், மும்பையில் போய் புதிய வாழ்வைத் தொடங்கு என கொல்லாமல் சாந்தகுமாரை எச்சரித்து அனுப்பியுள்ளார்.

2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சரவணபவன் உரிமையாளார் ராஜகோபாலால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி காவல்துறையில் புகார் அளித்தனர் ஜீவஜோதி - பிரின்ஸ் சாந்தகுமார் தம்பதியர். சாந்தகுமார் கொல்லப்படாததை அறிந்த ராஜகோபால், மீண்டும் அக்டோபர் 24-ம் தேதி ஜீவஜோதியின் கண்முன்னேயே சாந்தகுமாரை கடத்தி கொடைக்கானலில் வைத்து கொலை செய்தார். ஒரு வாரம் கழித்து அவருடைய உடல் வனத்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது.

ஜீவஜோதியின் புகாரைத் தொடர்ந்து இந்த விவகாரம் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் சரணடைந்தார் ராஜகோபால். இ‌ந்த வழ‌க்‌கை விசாரித்த பூந்தமல்லி நீதிமன்றம் 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜகோபாலுக்கு 10 ஆ‌ண்டு ‌கடுங்காவல் சிறை‌த் த‌ண்டனையு‌ம், 55 ல‌ட்ச‌ ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌தி‌த்தது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து 2009ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ராஜகோபால். ஆனால் உயர்நீதிமன்றம் அவருடைய 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அறிவித்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார் ராஜகோபால். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும் ஜூலை 7ம் தேதிக்குள் ஆஜராகவும் கெடு விதித்தது.

உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை கூறி, கால அவகாசம் கேட்டார் ராஜகோபால். ஆனால் அதற்கு நீதிமன்றம் மறுத்த நிலையில் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஸ்ட்ரெச்சரில் வந்து ஆஜரானார் ராஜகோபால். நாளுக்கு நாள் உடல் நிலை மோசமடைந்து வந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிறைக்கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் ராஜகோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ராஜகோபாலின் மகன்கள், அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வேண்டும் எனக் கோரி மனுத் தாக்கல் செய்தனர். ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவ அறிக்கையைப் பார்வையிட்ட நீதிபதிகள் அதற்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். ஆனாலும், சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் இன்று காலை அவர் உயிரிழந்தார்.

உழைப்பாலும், வாடிக்கையாளர்களின் அபிமானத்தாலும் மிகப்பெரும் வளர்ச்சியடைந்து வந்த அவர், தகாத ஆசையாலும், பேராசையாலும், மூட நம்பிக்கையின் பயனாலும் தன் வாழ்நாள் முழுவதையும் வழக்கிற்காகவே செலவழித்து, நற்பெயரையும் இழந்து பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.