Tamilnadu

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு : கேட்டது ஒன்று... கிடைத்தது ஒன்று.. 

கடந்த மாதம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆனையத்தின் கூட்டத்தில் காவிரி படுகையில் மழையின் அளவை பொறுத்தும், அணைக்கான நீர் வரத்தை பொறுத்து தமிழகத்திற்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19டி.எம்.சியும், ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 டி.எம்.சியையும் சேர்த்து மொத்தமாக 40.43 டி.எம்.சி நீரை கர்நாடகா திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கே.ஆர்.எஸ், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் 13 டிஎம்சி இருந்த அணைகளின் கொள்ளளவு தற்பொழுது 30 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்ட விவசாயிகள் தங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என போராட்டம் நடத்திவந்தனர்.

இதனை அடுத்து நேற்று முன்தினம் கர்நாடக அமைச்சர் மற்றும் காவிரி நீர்ப் பாசனத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் மாண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது என முடிவு செய்யப்பட்டது இதனை அடுத்து இன்று அதிகாலை கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 350 கனஅடி வீதம் மாண்டிய மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்தும் 855 கன அடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது கேரள மாநிலத்தின் வயநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த பருவ மழை இன்னும் ஒரு சில தினங்களில் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு பருவமழை தீவிரம் அடையும் பட்சத்தில் கபினி அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும். அதன் மூலம் தமிழகத்திற்கு திறக்கக் கூடிய நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.