Tamilnadu

இன்ஜினியர் கவுன்சிலிங்கில் மாணவர்களை ஏமாற்றி அட்மிஷன் போட்ட சாய்ராம் கல்லூரி : மாணவர்களே உஷார் .. !

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில், கல்லூரிகள் மாணவர்களின் விருப்பமின்றி, தங்கள் கல்லூரிகளில் சேர்த்துவிடுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை முறைகேடுகளை தடுக்க ஆன்லைன் மூலம் மாணவர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்துகொள்ளும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கல்வி நிறுவனங்கள் அதிலும் புகுந்து முறைகேடுகளைச் செய்துவருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு 5 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 6,740 மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு விருப்பமான கல்லூரியைத் தேர்வு செய்தனர்.

கடலூர் மாவட்டம் வீணங்கேணியைச் சேர்ந்த ராஜவேலு என்பவரின் மகன் ராஜதுரையும் இந்த கலந்தாய்வில் கலந்துகொண்டார். ஆனால், அவர் விருப்பப்பட்ட கல்லூரியை தேர்வு செய்ய முடியாமல், அவர் ஏற்கனவே சாய்ராம் குழுமத்தின் இரண்டு கல்லூரிகளைத் தேர்வு செய்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய மாணவர் ராஜதுரை, “நான் 151 கட் ஆஃப் வைத்திருக்கிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் இருந்து பேசுவதாகக்கூறி, கவுன்சிலிங் தொடர்பான யூசர் நேம், பாஸ்வேர்டு போன்றவற்றை கேட்டுப்பெற்றனர்.

அந்தத் தகவல்களை வைத்து நான் சாய்ராம் குழுமத்தின் இரண்டு கல்லூரிகளைத் தேர்வு செய்தது போல பதிவு செய்துள்ளனர். இதனால், இப்போது வேறு கல்லூரிகளைத் தேர்வு செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

ராஜதுரையின் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு கடலூர் மாவட்ட அரசு பொறியியல் கல்லூரியில் காலியிடம் உள்ளது. அருகிலிருக்கும் மாவட்டங்களிலும் நிறைய காலியிடங்கள் இருக்கின்றன. ஆனால், தனியார் கல்லூரியின் முறைகேட்டால் தகுதி இருந்தும் அவரால் அவற்றை தேர்ந்தெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தங்களது கல்லூரியின் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கல்லூரிகள், மாணவர்களிடம் செல்போனில் பேசி, தகவல்களைப் பெற்று ஏமாற்றி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், “மாணவர்கள் யார் செல்போனில் பேசினாலும் யூசர் நேம், பாஸ்வேர்டு உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்கக்கூடாது. யாராவது ஏமாற்றி பெற்றதாக புகார் அளித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதோடு, மாணவர்கள் மீண்டும் கல்லூரிகளைத் தேர்வு செய்ய வழிவகை செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது.