Tamilnadu

ஆயுள் தண்டனைதான் கேட்டேன்.. தீர்ப்பில் நஞ்சை விதைத்திருக்கிறார் நீதிபதி : வைகோ விளாசல் 

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ம.தி.மு.க பொதுச்செயலாலர் வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார். இதனால் அவர் மீது தேசத் துரோகம், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என்றும் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பதாகவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். மேலும், ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு அளிக்கப்பட்டதற்குப் பிறகு வெளியே வந்த வைகோ பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஈழப்போர் நடந்த காலகட்டத்தில் 17 முறை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாகச் சந்தித்து கடிதங்கள் கொடுத்து இருக்கிறேன். அது புத்தகமாகவும் வெளியாகி இருக்கிறது.

அதோடு பல இடங்களில் நான் விடுதலைப்புலிகளையும், ஈழத் தமிழர் நலன் குறித்து பேசி இருக்கிறேன். பேசியதை மறுக்கவில்லை. இதற்கு முன்னதாகவும் இதேபோன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டேன். இது இரண்டாவது வழக்கு. அதுவும் ஒரே காரணத்திற்காக தொடரப்பட்டுள்ளது.

இந்திய ஒருமைப்பாடு சிதைந்துவிடக்கூடாது. இந்த நிலைமை தொடர்ந்தால், ஈழ தமிழ் இனம் அழிக்கப்பட்டுவிடும். இதற்காகத்தான் நான் பேசினேன். இன்றும் பேசுவேன். நாளையும் பேசுவேன். இது தவறா என்று கேட்டு நீதிமன்றம் போனேன். இது தவறு இல்லை என்று அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகளே சொன்னார்கள்.

நீங்கள் இந்த வழக்கில் குற்றவாளி. தண்டனை தொடர்பாக எதுவும் சொல்ல விரும்புகின்றீர்களா? என்று நீதிபதி கேட்டார். தண்டனையை சீக்கிரம் அறிவித்துவிட்டால் நல்லது என்று சொன்னேன். தீர்ப்பு வழங்கினார்கள். வாங்கி வாசித்து பார்த்தேன். இடி விழுந்ததுபோல் இருந்தது.

நான் தீர்ப்பை வாசித்து விட்டு குறைந்த தண்டனை வழங்குமாறு நான் கோரிக்கை வைத்ததாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளீர்கள். நான் யாரிடம் அப்படிக் கேட்டேன். எவ்வளவு அதிக பட்ச தண்டனை தரமுடியுமோ அதைக் கொடுங்கள் என்றேன். இப்படி மாற்றி எழுதி இருக்கிறீர்கள் என்றால், அந்த நீதிபதியின் மனதிலும், தீர்ப்பிலும் நஞ்சும், விஷமும் உள்ளது.

ஆயுள் தண்டனையாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன். இளைஞர்களுக்கு ஈழப்பிரச்னையை மீண்டும் மீண்டும் கொண்டு செல்வேன். நான் பெரியார் வழி வந்தவன். எதற்கும் அஞ்சமாட்டேன். நான் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன்.நாளையும் ஆதரிப்பேன் சுதந்திர தமிழீழம் ஒன்றே இறுதி இலக்கு” என்று தெரிவித்தார்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து அபராதத் தொகையை கட்டிய வைகோ, தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமின் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்து, மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக ஒரு மாதம் தீர்ப்பை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.