Tamilnadu

மருத்துவக்கல்லூரி கட்டணம் குறைப்பு : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கிறது. இதனைக் குறைத்து உத்தரவிடக் கோரி சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த மருத்துவர் ரவீந்தரநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில், 2014ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் தமிழக அரசுக்கு சொந்தமானது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அரசு குறிப்பேட்டில் அண்ணாமலை பல்கலைக்கழகம் தனியார் கல்லூரி என்று உள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான மருத்துவ சேர்க்கை நடைபெற்று வருகிறது. அண்ணாமலை பல்கலைக்கழகம் கட்டணத் தொகையாக 5 லட்சத்து 50 ஆயிரம் வசுலிக்கிறது. இது தனியார் கல்லூரியையே மிஞ்சும் அளவுக்கு உள்ளது.

எனவே, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசுக் குறிப்பேட்டில் தனியார் என குறிப்பிட்டதை நீக்கவேண்டும் எனவும், கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு கல்லூரி கட்டணத்தை அண்ணாமலை பல்கலைக்கழகம் நிர்ணயிக்க உரிமையில்லை. கட்டண நிர்ணயக்குழு தான் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என தெரிவித்து மருத்துவக் கல்லூரி கட்டணத்தை 5.50 லட்சத்தில் இருந்து 4 லட்சமாக குறைத்து உத்தரவிட்டனர்.