Tamilnadu

அரசு ஊழியர்களுக்கு எதிரான பழிவாங்கும் போக்கை அரசு கைவிடவேண்டும் : ஜாக்டோ ஜியோ கோரிக்கை!

பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அண்மையில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கமான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பெரும் போராட்டத்தை நடத்தினர்.

பின்னர் பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு தரப்பு ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகச் சொல்லி போராட்டத்தைக் கலைத்து பணிக்குத் திரும்புமாறு கூறியது.

இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்ட குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது.

அப்போது பேசிய ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறியே போராட்டத்தை வாபஸ் பெறச் செய்தது தமிழக அரசு.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை தரக்குறைவாக பேசி வருகிறார் என குற்றஞ்சாட்டி, இவ்விவகாரத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு ஊழியர்களுக்கும், அரசுக்கும் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசு ஊழியர்கள் மீது பழி வாங்கும் வகையில் பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அதேசமயம், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என அரசு பொய் பிரசாரம் செய்கிறது என தெரிவித்துள்ளார்.

2500க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 3-ல் திறக்கப்பட்டது. இதுவரை மாணவர்களுக்கான புத்தகங்களை வழங்காமல், ஆசிரியர்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து பாடம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

உண்மையில், எத்தனை அரசு பள்ளிகளில் போதிய கணினிகள் வழங்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில், ஜாக்டோ ஜியோவின் அடுத்தகட்டப் போராட்டம் என்பது அரசு கையில் உள்ளது. முதல்வர், அமைச்சர்களை சந்தித்து கோரிக்கைகளை அளிக்க உள்ளோம். அரசின் முடிவை பொறுத்தே அடுத்தகட்ட போராட்டம் குறித்து 15 நாளில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.