Tamilnadu

மிரட்டல் வழக்கில் ஓ.பி.எஸ் சகோதரர் மீது வழக்குப் பதிவு? தேனி நடுவர் நீதிமன்றம் உத்தரவு!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தென்னிந்திய பார்வட் பிளாக் கட்சியின் நகர பொதுச் செயலாளராக பொறுப்பில் உள்ளவர் துரை. தேனி மாவட்ட நுகர்வோர் அமைப்பின் நிர்வாகியாகவும், நுகர்வோர் பாதுகாப்பு ஆர்வலராக துரை பதவிவகுத்துவருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக விவசாயப் பகுதியில் உள்ள மணல் கொள்ளைப் போகிறது என அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து புகார் மனு அளித்து வந்துள்ளார். இந்நிலையில் மனு அளித்த கொஞ்ச நாட்களிலேயே அவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்பு தன்னை தாக்கியது துணை முதல்வர் சகோதரர் ஓ.ராஜாவின் அடியாட்கள் தான் என அவர் குற்றம் சாட்டினார். இதனையடுத்து ஓ.ராஜா, நாய் சேகர், குண்டாஸ் சுரேஷ், கல்லுப்பட்டி சசி, தென்கரை சசி ஆகியோர் மீது பெரியகுளம் காவல்நிலையத்தில் துரையின் சகோதரர் புகார் அளித்தார்.

துரையின் சகோதரர் அளித்த புகாரை போலீஸார் வாங்கிக் கொண்டு வழக்கு பதிவு செய்யாமல் புகார் மனு பெற்றுக்கொண்டதற்கான சிஎஸ்ஆர் காப்பியை மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டனர். அந்த சிஎஸ்ஆர் காப்பி மனுவில் ஓ.ராஜாவின் பெயர் சேர்க்கப்படவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த துரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என துரை கூறிவருகிறார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்தும் துரை பெரிய குளம் பகுதியில் உள்ள ரேஷன் கடை பொருட்கள் திருட்டுப்போவதாகவும், தவறான கணக்குகள், கொள்ளை சம்பம் நடைபெறுவதாகவும், இதனை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.

இந்த பொதுவான புகாருக்கு கோவம் அடைந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா கோபமடைந்து துரைக்கு செல்போனில் அழைத்து மிரட்டியுள்ளார். இவ்வாறு அவர் மிரட்டிப் பேசிய ஆடியோ சமூகவலைதளத்தில் பரவியது.

இந்த சம்பம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியும் காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் துரை நீதிமன்றத்தை நாடினார். பெரியகுளம் நடுவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், தன்னை தொடர்ந்து பிராட்டியவர்கள் மீதும், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக நீதிமன்றம் வழிவகை செய்யவேண்டும் என தெரிவித்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.ராஜா உட்பட தாக்குதல் நடத்திய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவு நகலை துரை தற்போது பெற்றுள்ளார். நீதிமன்றத்தின் இவ்வாறு உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.