Tamilnadu

தண்ணீர் பிடிப்பதில் தகராறு : பெண்ணை கத்தியால் குத்திய தமிழக சபாநாயகரின் கார் ஓட்டுநர்

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைத் தூக்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்திருப்பதாக மத்திய நீர்வளத்துறையும் அறிக்கை விடுத்திருக்கிறது.

இதற்கிடையே நகர்ப்புறங்களில் லாரிகளின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும், சில குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவு சமயத்தில் தண்ணீர் விநியோகம் செய்வதால் மக்களின் அன்றாட வாழ்க்கையும் பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

குடிநீர் பஞ்சத்தைப் போக்காமல், கர்நாடக, ஆந்திர அரசுகளிடம் இருந்து தமிழகத்துக்கான நீரை பெற்றுத்தராமல் ஆட்சியைக் காப்பாற்றுவதிலேயே முனைப்புடன் செயல்பட்டு வருகிறது அ.தி.மு.க அரசு.

இந்நிலையில், சென்னை அனகாபுத்தூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் பொறியாளர் ஒருவர் தண்ணீருக்கான மின்மோட்டார் மூலம் குடிநீரை தொட்டிக்கு ஏற்றிக்கொண்டிருக்கையில், அதே குடியிருப்பில் குடியிருக்கும் ஐயப்பன் எனும் நபர் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இவர், சபாநாயகர் தனபாலிடம் கார் ஓட்டுநராக உள்ளார். மேலும், தலைமைச் செயலக பணியாளர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார்.

இருவருக்கும் இடையேயான தகராறு குறித்து அறிந்த பொறியாளரின் மனைவி, ஐயப்பனிடம் எப்படி தனது கணவரை அடிக்கலாம் என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு ஐயப்பனோ அதிகார தொனியில், “நான் யாருனு தெரியுமா? நான் நினைச்சா உங்கள இல்லாமலே பன்னிருவேன்..” என மிரட்டியுள்ளார்.

இருதரப்பும் பெரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஆத்திரமடைந்த ஐயப்பன் திடீரென தனது வீட்டில் உள்ள கத்தியை எடுத்து பொறியாளரின் மனைவியைக் குத்தியுள்ளார்.

இதனையடுத்து கூட்டம் கூடியதால் ஐயப்பனை, சங்கர் நகர் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து பேசிய போலீசார், கைதான ஐயப்பனை விடுவிக்கச் சொல்லி அ.தி.மு.க தரப்பில் இருந்து அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர். இருந்தும், ஐயப்பன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.