Tamilnadu

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல் !

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில், அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 5 சென்டி மீட்டர் மழையும், திருப்பத்தூர், திருத்தணியில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

அந்தமானில் பருவமழை தொடங்கியதை அடுத்து கடலோர பகுதியில் 45 கி.மீ. வரை பலத்த காற்று விடக்கூடும். பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்கச் செல்லுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. பகல் நேரங்களில் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றாலும், மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.