Tamilnadu

மாணவர் சேர்க்கை குறைந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட உத்தரவு!?

தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசு நிதிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவங்களில் மாணவர் சேர்க்கை குறைவாக நடப்பதாகவும், மாணவர்களிடம் கட்டணம் அதிக வசூல் செய்வதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தது.

இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, "தமிழ்நாட்டில் 247 தனியார் மற்றும் 29 அரசு நிதிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 20 சதவிகிதத்திற்கு குறைவாகவே பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகிறது.

இதனால் அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவது வீண் செலவினம் என்று பள்ளிக்கல்வித்துறை கருதுகிறது. எனவே, 2019-20ம் கல்வியாண்டு முதல் 30 சதவீத மாணவர்கள் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்திருந்தால் மட்டும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தால் அந்த நிறுவனங்களை மூட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் விதிமுறைகளின்படி, 30% குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள கல்வி நிறுவனங்களை மூடலாம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.