Tamilnadu

எட்டு வழிச்சாலை திட்டம் : தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு !

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த 8 வழி சாலைக்கு காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட கோரி 5 மாவட்ட மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் இந்த மனு ஜுன் 3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.