Tamilnadu

ஆற்றில் கிடந்த ஆதார் அட்டைகள்: வீசியது யார் என கண்டுபிடிக்க பொதுமக்கள் கோரிக்கை..!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நாகலடி, கோட்டகம் பகுதி ஆற்றங்கரை தெரு அருகில் முள்ளியாற்றில் 3000த்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் குப்பைகள் போல் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தாசில்தார் உத்தரவின்பேரில் துணை வட்டாட்சியர், வி.ஏ.ஓ ஆகியோர் சென்று அதனைப் பார்வையிட்டனர். பின்னர், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வி.ஏ.ஓ புகார் ஒன்றை அளித்துள்ளார். பொதுமக்களும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கட்டிமேடு, ஆதிரெங்கம், சேகல் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அஞ்சலகம் மூலம் வழங்க வேண்டிய ஆதார் அட்டைகள் அவை என தெரியவந்துள்ளது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களுடைய ஆதார் ஆட்டையை தேடி கண்டுபிடித்து எடுத்துச் சென்றுள்ளனர். மீதமுள்ள ஆதார் அட்டைகளை போலீசார் எடுத்து சென்றுள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது.

பொதுமக்கள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து பின்னர் தபால் மூலம் அவர்கள் கைகளுக்கு ஆதார் அட்டை வரவில்லை என்றதும் இ-சேவை மையங்களையும், தனியார் பொது சேவை மையங்களிலும் ஆதார் டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஆதார் குறித்து பல குளறுபடிகள் நடந்துள்ளதாக மக்கள் கடந்த காலங்களில் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், தற்பொழுது அவர்களுக்கு தபால் மூலம் வந்த ஆதார் அட்டைகளை பொதுமக்களுக்கு டெலிவரி செய்யாமல் மூட்டை மூட்டையாக ஆற்றில் கொட்டியிருப்பது கண்டு பொதுமக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.