Tamilnadu

ஒரே நாளில் 2 தேர்வு: தகுதித்தேர்வா & பி.எட் தேர்வா எதை எழுதுவது ? மாணவர்கள் குழப்பம்!

பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையும், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த முடியும்.

நடப்பாண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பாணை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியானது. முதலில் தேர்விற்கு விண்ணாப்பிக்க மார்ச் இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அரசு இணையதளத்தில் கோளாறு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ஏப்ரல் 12 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கால அவகாசம் மாற்றப்பட்டது. இந்த தேர்விற்கு 6 லட்சத்து 4,000 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்னப்பங்கள் முழுவதும் வந்த பிறகு தற்போது தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஜூன் 8, 9 ஆகிய இரண்டு நாள்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். அதன்படி, 8-ஆம் தேதி முதல் தாளும், 9-ஆம் தேதி இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பி.எட் படித்து கொண்டிருக்கும் மாணவர்களும் முதல் தாள் எழுதலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வும் பி.எட் இறுதியாண்டு தேர்வும் ஒரே நாளில் நடைபெறுகிறது. இதனால் மாணவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதா அல்லது பி.எட் எழுதுவதா என குழப்பம் அடைந்துள்ளனர்.