Tamilnadu

மின்தடையால் நோயாளிகள் 5 பேர் பலி : ராஜாஜி அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த சோகம்!

நேற்று கனமழை பெய்த காரணத்தால் மதுரையில் அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே ராஜாஜி அரசு மருத்துவமனையில் விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு வென்டிலேட்டர் வசதியுடன் 15 படுக்கைகள் உள்ளன. நேற்று மாலை 6 மணிக்கு மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது.

இதனால் நகர் முழுவதும் இருள் சூழ்ந்தது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகே மீண்டும் மின்சாரம் வந்தது. இந்நிலையில் மின்வெட்டு ஏற்படும்போது மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர், மின் சப்ளை இல்லாததால் இயங்கவில்லை. இதனால் சிகிச்சையில் இருந்த 15 நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதில், மதுரை மாவட்டம் மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தை சேர்ந்த மல்லிகா, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவீந்திரன் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து மேலும் இரு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு காவல் துணை ஆணையர், அரசு மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர், மருத்துவ அதிகாரிகள் ஆகியோர், உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறுகையில், ‘‘நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திடீர் மின் தடை ஏற்பட்டது. உடனடியாக நாங்கள் பேட்டரியை இயக்கி, இயங்காமல் போன சுவாசக்கருவியை சீரமைத்தோம். சுவாசக்கருவி இயங்காமல் போனதால், யாரும் இறக்கவில்லை. ஏற்கெனவே தனியார் மருத்துவமனைகளில் இருந்து மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்திருந்தவர்கள் தான் இறந்திருக்கிறார்கள். மின் தடை தொடர்பாக மின்சார வாரியத்திடம் புகார் அளிக்க இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.