Tamilnadu

நீட் தேர்வு : மாணவனுக்கு உதவி ஹீரோவான போலீஸ்!

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2019-20-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (நீட்) தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான " நீட்" தேர்வு, இன்று (5-ம் தேதி) நாடெங்கும் நடைபெற்றது. ஃபானி புயல் பாதிப்பால் ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 14 நகரங்களில் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். நாடு முழுவதும் 15.19 லட்சம் மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வை எழுதினர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்நிலையில்,கோவையில் உள்ள நேஷனல் மாடல் பள்ளியில் நீட் தேர்வு மையம் அமைந்திருந்தது. அங்கு தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர், புகைப்படம் இல்லாததால் தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சரவணகுமார் அந்த மாணவனுக்கு புகைப்படம் எடுப்பதற்குரிய பணத்தை வழங்கினார். பணம் வழங்கியதோடு இல்லாமல் அந்த மாணவர் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்தார். தக்க நேரத்தில் அந்த மாணவருக்கு உதவிய காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.