Tamilnadu

தொடரும் மெட்ரோ ஊழியர்களின் போராட்டம் ; மீண்டும் இன்று பேச்சுவார்த்தை!

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் 8 பேர் இணைந்து பணியாளர் சங்கம் ஒன்றை தொடங்கினர். இதனால் அவர்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. இதனையடுத்து மற்ற ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கினர். இதனால் மெட்ரோ ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெட்ரோ ஊழியர்களுடன் நேற்று சென்னை குறளகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள், சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுமார் 4 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், 8 பேர் பணிநீக்கத்தை ரத்து செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்தது. இதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால், தங்களது போராட்டம் தொடரும் என மெட்ரோ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழியர்களின் போராட்டம் காரணமாக 50 சதவீத மெட்ரோ ரயில்கள் நேற்று இயக்கப்படவில்லை. இதனிடையே, மெட்ரோ ரயில் நிறுவன கட்டுப்பாட்டு அறையில் நுழைந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக மெட்ரோ ஊழியர்கள் 18 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.