Tamilnadu

பொள்ளாச்சியைப் போல பெரம்பலூரிலும் பாலியல் வன்முறை - ஆளுங்கட்சிக்குத் தொடர்பா?

தமிழகத்தை மட்டுமில்லாமல் நாட்டையே உலுக்கியது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம். 7 ஆண்டுகளுக்கும் மேலாக இளம் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, காதலிப்பதாக ஏமாற்றி அவர்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் ரீதியில் பல்வேறு கொடுஞ்செயலில் ஈடுபட்ட சம்பவம் சமீபத்தில் வெளிவந்து பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது.

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க அரசின் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனின் தொடர்பு உள்ளதும் ஊடகம் வாயிலாக தெரியவந்தது. இதன் தாக்கம் ஓயாத நிலையில் தற்போது இதே மாதிரியான சம்பவம் பெரம்பலூரில் நடந்துள்ளது.

ஆளும் தரப்பைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக அழைத்து நட்சத்திர விடுதியில் வைத்து அந்தப் பெண்களை மிரட்டி அடிபணிய வைத்து அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வருகின்றனர்.

இதுகுறித்த ஆடியோ ஒன்று வெளியானதால் ஆளும் தரப்பின் பாலியல் கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் அருள் என்பவர் காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை புகாரை வாங்க மறுத்துவிட்டு சம்மந்தப்பட்ட நபரிடம் பாதிக்கப்பட்ட பெண்களை அழைத்துச் சென்று சமரசம் பேசவும், மிரட்டியும் அனுப்பிவைத்துள்ளனர்.

பெரம்பலூரில் அங்கன்வாடி அலுவலர்கள், அரசு அதிகாரிகள் என 16க்கும் மேற்பட்டோர் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என வழக்கறிஞர் அருள் தெரிவித்துள்ளார். ஆனால் மாவட்டம் முழுவதும் பாலியல் கொடுஞ்செயல் தொடர்பான செய்திகள் பரவி வருகிறது. இருந்தும் காவல்துறை எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் காலந்தாழ்த்தி வருவது குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதை உணரமுடிகிறது என்பதால் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்க உள்ளதாக அருள் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளித்த வழக்கறிஞர் அருள் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.