Tamilnadu

தமிழக அரசின் அலட்ச்சியதால் தொடரும் கர்ப்பிணி பெண்களின் மரணம்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சமூக மாற்றத்திற்கான மருத்தவர் சங்கத்திற்கான பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியதாவது:

“தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கெட்டுப்போன ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் 15 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கெனவே ,சாத்தூர் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தத்தை கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்திய நிகழ்வு தமிழக மக்களை கவலைக்குள்ளாக்கியது.

இந்நிலையில் கெட்டுப்போன ரத்தத்தைச் செலுத்தியதால் 15-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையின் கட்டமைப்பு செயலிழப்பே இதற்கு மிக முக்கியக் காரணமாகும். தமிழக அரசின் ரத்த வங்கிகள், ரத்தப் பரிசோதனை நிலையங்களின் சேவைகள் தரமானதாக இல்லை.

பரிசோதனைக்கு வழங்கப்படும் கிட்டுகள் (kits) தரமானதாக இல்லை. ரத்த வங்கிகள், ரத்தப் பரிசோதனை நிலையங்கள் நவீன தொழில்நுட்பம் கொண்டதாக இல்லை. ரத்தம் பொருந்துகிறதா என்பதை பரிசோதிக்க நவீன தொழில் நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. எச்.ஐ.வி கிருமி தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய, நவீன நியூக்ளிக் அமில பரிசோதனைகள் வசதி செய்து கொடுக்கப்பட வில்லை.

ரத்த வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்த மத்திய - மாநில அரசுகளின் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப் படவில்லை. தேசிய இரத்தம் ஏற்றுதல் கழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படை யில் ரத்த வங்கிகளில் மருத்துவர்கள், ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. ஒப்பந்தம் மற்றும் வெளிக்கொணர்தல் முறையிலான பணி நியமனங்கள், தரமான சேவையை அளித்தலில் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

ரத்த வங்கிகளை முறையாகக் கண்காணிக்கும் ஏற்பாடு இல்லை. ரத்தம் செலுத்துதல் மருத்துவத்தில் ( transfusion medicine) பயிற்சி பெற்ற மருத்துவர்களை ரத்த வங்கிகளில் பணி நியமனம் செய்யவில்லை. ரத்தக் கூறுகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக, முழுமையான ரத்தத்தை பயன்படுத்தும் முறை அதிக அளவில் தொடர்கிறது.

ரத்தத்தைச் செலுத்துவதற்கு முன்பாக ,எச்.ஐ.வி /மஞ்சள்காமாலை பி போன்றவற்றிற்கான பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. இதுபோன்ற பிரச்சினைகளே இந்நிகழ்வுகளுக்குக் காரணம். எனவே, ரத்தம் செலுத்துவதற்கான தமிழக அரசின் 2018 ஆம் ஆண்டின்," மாநில ரத்தக் கொள்கை மற்றும் செயல்படுத்துவதற்கான வழிமுறையை நடைமுறைப் படுத்த வேண்டும்.

ரத்த சோகை சிகிச்சையை அறிவியல் ரீதியாக முறைப்படுத்த வேண்டும். அவசியமின்றி ரத்தம் செலுத்தப்படுவதை தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மக்கள் நல்வாழ்வுத்துறை கட்டமைப்பு சீர்குலைவிற்கு தார்மீகப் பொறுப்பேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

சாத்தூர் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் அந்த இளைஞரை 2016 ஆண்டே எச்.ஐ.வி இருப்பது தெரிந்தும் அவரை போன் செய்து வரச்சொல்லியும் வரவில்லை. அதன்பின்னர் அவர் இரண்டு ஆண்டுகள் கழித்து ரத்தம் தந்து கர்ப்பிணி பாதிக்கப்பட்டார்,. அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். ஆகவே அதை தடுத்திருக்கலாம் அல்லவா? இதுபோன்ற அலட்சியங்களுக்காகத்தான் நாங்கள் அமைச்சரை குற்றம் சாட்டுகிறோம்.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.