Tamilnadu
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ள இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 18 தொகுதிகளுக்கான தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணைப்படியே ஏப்ரல் 18-ந் தேதி நடக்க உள்ளது. அந்த தொகுதிகளுக்கும் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை பொறுத்தமட்டில் வடசென்னை தொகுதிக்கு சென்னை மாநகராட்சியின் வடக்கு வட்டார துணை ஆணையாளர் திவ்யதர்ஷினியும், தென்சென்னை தொகுதிக்கு தெற்கு வட்டார துணை ஆணையாளர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசும், மத்திய சென்னை தொகுதிக்கு மத்திய வட்டார துணை ஆணையாளர் பி.என்.ஸ்ரீதரும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கென தனியாக உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடசென்னை தொகுதிக்கு பழைய வண்ணாரப்பேட்டை பேசின் பாலம் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்திலும், தென்சென்னை தொகுதிக்கு அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்திலும், மத்திய சென்னை தொகுதிக்கு செனாய்நகர் புல்லா அவென்யூ, 2-வது குறுக்கு தெருவில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்திலும் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி கருணாகரன் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வியாசர்பாடி சர்மாநகர் 2-வது பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. வேட்புமனுக்கள் பெறப்படும் இடங்களில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!