Sports

”தொடருவாரா ஸ்டீபன் ஃப்ளெமிங்.. முடிவெடுத்த CSK.. தோனி சொன்னது இதுதான்” - முழு விவரம் உள்ளே!

ஐபிஎல் தொடர் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை யாராலும் தவிர்க்க முடியாது. அந்தளவுக்கு சிஎஸ்கே அணி தனது சாதனைகளால் கோப்பையை அடுக்கி உள்ளது.

குறிப்பாக கடந்த சில வருடங்களாக சிஎஸ்கே அணியின் செயல்பாடு குறித்தும் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் செயல்பாடு குறித்தும் பல்வேறு அதிருப்திகளை ரசிகர்கள் வெளிப்படுத்தினர். இதனால் அணியில் ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் நிலை குறித்து கேள்வி எழும்பியது.

ஆனால், அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கை மாற்றும் எண்ணம் சிஎஸ்கே நிர்வாகத்துக்கு இல்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

2008-ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியுடன் பயணித்து வரும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ஃப்ளெமிங், 2009 முதல் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அவரது தலைமையில் சென்னை அணி ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக உருவெடுத்தது.

சமீபத்திய சீசன்களில் சிஎஸ்கே மோசமான முடிவுகளை சந்தித்தது. 2025-ஆம் ஆண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலும், 2026 சீசனில் 8-வது இடத்திலும் முடித்தது. இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் மாற்றம் தேவை என்ற கருத்து எழுந்தது. சமூக வலைதளங்களில் "Sack Fleming" என்ற பிரச்சாரங்களும் நடந்தன.

ஆனால், இந்த விமர்சனங்கள் எதுவும் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை மாற்றவில்லை என தெரிகிறது. ஃப்ளெமிங்கின் ஒப்பந்தம் வழக்கம்போல் இந்த ஆண்டும் புதுப்பிக்கப்படும் எனவும், அவரது ஒப்பந்தம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் நடைமுறையிலேயே உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரில் விளையாடும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் ஃப்ளெமிங் தான் செயல்பட்டு வருகிறார்.

MLC தொடர் முடிந்த பிறகு சிஎஸ்கே நிர்வாகம் சீசன் மதிப்பாய்வை நடத்தவுள்ளது. அப்போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். எனினும், ஃப்ளெமிங்கின் பதவி குறித்து எந்த விவாதமும் நடைபெறாது என்று கூறப்படுகிறது. அவரது தொடர்ச்சி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டதாகவே தெரிகிறது.

இந்த முடிவு, CSK அணியில் மகேந்திர சிங் தோனியின் செல்வாக்கு இன்னும் அதிகமாக இருப்பதையே மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சிஎஸ்கே வீரர் தோனி மற்றும் பயிற்சியாளர் ஃப்ளெமிங் இடையேயான நீண்டகால தொழில்முறை உறவு, அணியின் நிர்வாக முடிவுகளில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

இதற்கிடையில், சில வீரர்களை மற்ற அணிகளிடம் Trade செய்வது குறித்த பேச்சுவார்த்தைகளும் நடந்ததாக வெளியாகியுள்ளன. ஆனால், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை Trade செய்வது குறித்து எந்த முடிவும் இல்லை என கூறப்படுகிறது.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இடையே கலீல் அஹ்மத் - டேவிட் மில்லர் வீரர் பரிமாற்றம் நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்தத் தகவலை இரு அணிகளும் மறுத்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி, எந்த வீரரையும் Trade மாற்று அணிகளிடம் செய்ய CSK தயாராக இல்லை என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கடந்த சீசனில் ரவீந்திர ஜடேஜா தொடர்பான ஒப்பந்தம் கடைசி நேரத்தில் உருவானது போல, ஐபிஎல் வர்த்தக சூழ்நிலைகள் எதிர்பாராத விதமாக மாறக்கூடும் என்பதால், எதிர்காலத்தில் புதிய நிகழ வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.