Sports

FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!

FIFA பிபா உலகக் கோப்பை 2026 தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த தொடரில், இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பல முன்னணி அணிகள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியுடன் தங்களது பயணத்தை தொடங்கியுள்ளன. குறிப்பாக இன்று நடைபெற்ற குரூப் I மற்றும் குரூப் J ஆட்டங்களில் பிரான்ஸ், நார்வே மற்றும் அர்ஜென்டினா அணிகள் ஆதிக்கமான வெற்றிகளை பதிவு செய்தன.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற குரூப் I பிரிவு ஆட்டத்தில் செனகல் அணியை எதிர்கொண்ட பிரான்ஸ் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே இரண்டு கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். போட்டி முழுவதும் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரான்ஸ், உலகக் கோப்பை கோப்பியை மீண்டும் கைப்பற்றும் இலக்குடன் களமிறங்கியிருப்பதை நிரூபித்தது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நடைபெற்ற குரூப் I பிரிவு ஆட்டத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை மேடைக்கு திரும்பிய நார்வே, ஈராக் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. உலகக் கோப்பை அறிமுகப் போட்டியிலேயே அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் இரண்டு கோல்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். எதிரணியின் பாதுகாப்பை எளிதாக உடைத்து நார்வேயின் ஆதிக்க வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

அதேப்போல், குரூப் J ஆட்டத்தில் அல்ஜீரியாவை எதிர்கொண்ட நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியுடன் தனது உலகக் கோப்பை பயணத்தை தொடங்கியுள்ளது.

உலகக் கோப்பையில் தனது 200வது சர்வதேச போட்டியில் களமிறங்கிய லியோனல் மெஸ்ஸி, ஹாட்ரிக் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். முதல் பாதியில் தொலைதூர ஷாட்டில் கோல் அடித்த மெஸ்ஸி, இரண்டாம் பாதியில் மேலும் இரண்டு கோல்களை பதிவு செய்து அல்ஜீரியாவின் சவாலை முறியடித்தார்.

போட்டி முழுவதும் பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அர்ஜென்டினா, நடுகளம் மற்றும் தாக்குதல் பகுதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. அல்ஜீரியா சில தருணங்களில் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டாலும், அர்ஜென்டினா பாதுகாப்பை உடைக்க முடியவில்லை.

FIFA உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகளில் பிரான்ஸ், நார்வே மற்றும் அர்ஜென்டினா அணிகள் அபார வெற்றிகளை பதிவு செய்து தங்களது உலகக் கோப்பை பயணத்தை சிறப்பாக தொடங்கியுள்ளன.

Also Read: FIFA 2026 கால்பந்து உலகக்கோப்பை : 3 நாடுகள் இணைந்து நடத்தும் மாபெரும் தொடர்.. வெளியான போட்டி விவரங்கள் !