Sports

அரையிறுக்குள் நுழைந்த இந்தியா… இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தேன்… உருக்கமாக பேசிய சஞ்சு சாம்சன்!

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (மார்ச் 1) நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் ஆடியது..

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் ராஸ்டன் சேஸ் 25 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, ஜேசன் ஹோல்டர் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்சருடன் 37 ரன்களும், ரோமன் பௌவல் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சருடன் 34 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சாய் ஹோப் 32 ரன்கள், ஷிம்ரன் ஹெட்மேயர் 27 ரன்கள் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 14 ரன்கள் எடுத்தனர்.

இந்தியத் தரப்பில் பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் இருவரும் நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர். எதிர்பாரா விதமாக நன்றாக தொடங்கிய அபிஷேக் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய இஷான் கிஷன் பெரிதாக ரன் எடுக்காமல் அவரும் 10 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அதற்கு பிறகு களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களின் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி கொடுத்தார். இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய திலக் வர்மா தேவைப்பட்ட நேரத்தில் அதிரடியாக ஆடி 27 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 17 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடி நம்பிக்கை அளித்து வந்தார். ஹர்திக்குக்கு பிறகு களமிறங்கிய ஷிவம் துபே 2 பவுண்டரிகள் விளாச, ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை பிறந்தது.

கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி இந்திய அணியை வெற்றிப் பெற வைத்தார். 50 பந்துகளில் 12 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 97 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்க்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடி 97 ரன்கள் விளாசிய சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. சஞ்சு சாம்சன் அடித்த 97 ரன்கள் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் சேசிங்கின் போது இந்திய வீரர்கள் அடித்த அதிகபட்ச ரன் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை 170 ரன்களுக்கு மேல் இந்திய அணி சேஸ் செய்தது இல்லை என்ற வரலாற்றையும் மாற்றி புதிய சாதனையும் படைத்துள்ளது.

போட்டிக்கு பின்னர் பேசிய, ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன், “நான் கடந்த 10-12 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறேன். 10 ஆண்டுகளாக இந்திய அணியுடன் இருக்கிறேன். தொடர்ந்து ஆடாவிட்டாலும், டக் அவுட்டில் அமர்ந்து விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற சிறந்த வீரர்களின் ஆட்டத்தை கவனித்து கற்றுக்கொண்டேன். நான் 50 முதல் 60 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும், சுமார் 100 போட்டிகளை டக் அவுட்டில் இருந்து பார்த்திருக்கிறேன். சிறந்த வீரர்கள் எப்படி போட்டியை முடிக்கிறார்கள், சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தை எப்படி மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை நான் நன்கு புரிந்துகொண்டேன். அது இன்று எனக்கு பெரிதும் உதவியது” என்றார்.

மும்பையில் வரும் 5ம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்தப் போட்டியிலும் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்று, டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Also Read: அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த இந்தியா… வெளியேறிய ஜிம்பாப்வே அணி… இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்!